முக்கிய செய்தி
மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவிப்பு
வர்த்தக வங்கிகளின் வட்டி வீதத்தை 2 வீதத்தால் குறைப்பது தொடர்பில் நாணயச் சபையினால் எடுக்கப்பட்டுள்ள கொள்கைத் தீர்மானத்துக்கு அமைவாக, வர்த்தக வங்கிகளின் கடன் வட்டி வீதங்கள் போதியளவு மற்றும் வேகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இம்மாதம் நாணயக் கொள்கை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிப்பதற்காக நேற்று (06.07.2023) பிற்பகல் இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொள்கை வட்டி விகிதங்களில் 2% குறைக்கப்பட்டதன் பலனை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் கையாளும் நுகர்வோருக்கு விரைவில் கிடைக்கச் செய்யுமாறும் இலங்கை மத்திய வங்கி ஏனைய வங்கிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக இதன் போது ஆளுநர் தெரிவித்தார்.
மேலும், வட்டி விகிதங்களைக் குறைப்பதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு விரைவில் வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கி நிதி நிறுவனங்களை உன்னிப்பாகவும் கடுமையாகவும் கண்காணித்து வருவதாக ஆளுநர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக மீண்டு நிலையானதாக மாற்றமடையும் என்று ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டுக் கடனை மேம்படுத்தும் நடவடிக்கையின் காரணமாக, அரசாங்கத்திற்கு நிதி வழங்குவதில் உள்ள அழுத்தங்கள் பாரியளவில் விடுவிக்கப்படும் என்றும் வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய அபாயங்கள் பெருமளவு குறைவதால், குறைந்த செலவில் தடைகள் இன்றி நிதி நகர்வுகளை அரசு மேற்கொள்ளும் என நந்தலால் வீரசேகர தெரிவித்துள்ளார்.