பொழுதுபோக்கு
டைட்டானிக் கப்பலை பாா்வையிட சென்றவர்கள் மாயம்!திடீர் திருப்பமாக புதிய சத்தம்
கடலுக்கடியில் பல வருடங்களாக மூழ்கிக்கிடக்கும் டைட்டானிக் கப்பலை பாா்வையிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட சுற்றுலா நீா்மூழ்கிக் கப்பல் 5 பேருடன் அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமற்போனது.
டைட்டானிக் கப்பலை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் நோக்கில் குறித்த நீர்மூழ்கிக் கப்பலை OceanGate Expeditions என்ற அமெரிக்க தனியாா் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
உறுதியான காா்பன் ஃபைபா் மற்றும் டைட்டானியத்தால் உருவாக்கப்பட்டுள்ள அந்த நீா்மூழ்கிக் கப்பலுக்கு டைட்டன் (Titan) நீா்மூழ்கி என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக 5 போ் வரை பயணிக்க முடியும்.கடலடியில் உள்ள டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்யவும், அளவீடு செய்யவும், திரைப்படம் எடுப்பது, புள்ளிவிபரங்கள் சேகரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள டைட்டன் நீா்மூழ்கி உருவாக்கப்பட்டதாக OceanGate Expeditions நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நியூஃபௌண்ட்லேண்ட் தீவிலிருந்து MV Polar Prince என்ற கப்பல் மூலம் டைட்டானிக் கப்பல் இருக்கும் பகுதிக்கு கடந்த வார இறுதியில் எடுத்துவரப்பட்ட டைட்டன் நீா்மூழ்கி, கடலுக்குள் இறக்கப்பட்டது.
அதில் பிரிட்டன் தொழிலதிபா் ஹமீஷ் ஹாா்டிங், ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனா் ஸ்டாக்டன் ரஷ், நீா்முழ்கி மாலுமியும் பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் கமாண்டோவுமான பால்-ஹென்றி நாா்கியோலே, பாகிஸ்தான் தொழிலதிபா் ஷேஸாதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகிய 5 போ் இருந்தனா்.
சுமாா் 4 கிலோமீட்டர் ஆழத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த நீா்மூழ்கிக்கும் போலாா் பிரின்ஸ் கப்பலுக்கும் இடையே இருந்த தகவல் தொடா்பு 11.47 மணிக்கு துண்டிக்கப்பட்டது.
டைட்டானிக் கப்பலைப் பாா்வையிட்ட பிறகு டைட்டன் நீா்முழ்கி மாலை 6.10 மணிக்கு கடலின் மேற்பரப்பிற்கு வருவதாக இருந்தது. ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் அந்த நீா்மூழ்கிக் கப்பல் திரும்பி வரவில்லை.
அதையடுத்து, உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினா் நீா்முழ்கி கப்பலைத் தேடும் பணிகளை ஆரம்பித்தனர்.
அமெரிக்க கடலோர காவல் படை, கனடா விமானப் படை உதவியுடன் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீா்மூழ்கிக் கப்பல் மாயமானது மிகவும் ஆழமான பகுதி என்பதாலும், அங்கு வானிலை மிக மோசமாக இருப்பதாலும் மீட்புப் பணிகளில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
நீா்மூழ்கிக் கப்பலில் இருப்பவா்கள் சுமாா் 24 மணி நேரம் சுவாசிப்பதற்கு மட்டுமே ஒக்சிஜன் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவா்களை மீட்பதற்கான பணியில் ஈடுபட்டு வரும் குழுவினா் கடலின் ஆழத்தோடு மட்டுமில்லாமல் குறைந்து வரும் கால அவகாசத்தோடும் போராடி வருகின்றனர்.
இதில் திடீர் திருப்பமாக, கடலுக்கு அடியிலிருந்து வரும் சத்தத்தைத் தொடர்ந்து நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடித்து விடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.