உள்நாட்டு செய்தி
சிறுபான்மைக்கு என்ன கிடைத்தது? – சாணக்கியன்

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என கேரிக்கை விடுப்பவர்கள் அரசியல் இலாபங்களுக்காக செயற்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
அம்பாறை ஊடக அமையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“புதிய அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் ஏனைய தமிழ் அரசியல் தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பாகிய நாம் சகல தமிழ் தரப்பினரும் தற்போது இணைந்து ஒரு முன்மொழிவினை இப்பேரவையில் முன்வைக்கவே விரும்புகின்றோம். யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்தும் இனி ஒரு நாடு வந்து பிரேரணை சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கும் என்பதை நாம் நம்பவில்லை.இதை சிலர் குறுகிய இலாப அரசியலுக்காக தெரிவிக்கின்றனர்.
தற்போது அரசாங்கத்திற்கு வாக்களித்த சிறுபான்மை தரப்பினருக்கு என்ன கிடைத்தது.அந்த முஸ்லீம் மக்களின் அடிப்படை உரிமையான ஜனாசா எரிப்பதை நிறுத்த முடியாத நீங்கள் அபிவிருத்தியை பெற்றுக்கொடுத்தும் பலனில்லை எவ்வாறு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்க போகின்றீர்கள். இவ்வுலகில் அவர்கள் 4 கடமைகளை செய்ய வேண்டும்.இதையாவது செய்ய விடாமல் இருக்கின்ற நிலையில் 20 ஆவது சீர்திருத்தத்திற்கு வாக்களித்தோ அல்லது ஆதரவு தெரிவித்தோ எந்த பலனோ மக்களுக்கு கிடைக்க போவதில்லை. இதனை நீங்கள் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும்.” என்றார்.