உள்நாட்டு செய்தி
“மாகாண சபை முறை கட்டாயம் வேண்டும்”
மாகாண சபை நிர்வாக முறை சிறுபான்மை மக்களுக்கு கட்டாயம் தேவை என மலையக மக்கள் முன்னணி தலைவரும், முன்னாள் அமைச்சரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெ. சந்திரசேகரனின் 10 ஆவது ஆண்டு சிரார்த்த தின நிகழ்வு அட்டன் ஸ்ரீ கிருஷ்ணபவான் கலாசார மண்டபத்தில் இன்று (01) வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிகழ்வில் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ். விஜெசந்திரன், ஆலோசகர் ஏ. லோறன்ஸ், நிதிச் செயலாளர் எம். புஷ்பா விஸ்வநாதன், மலையக தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளர் கே. சுப்பிரமணியம், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர். இராஜாராம், உபதலைவர்கள் எஸ். ஜெயபாரத்தி, எஸ். கிருஷ்ணன், மகளிர் அணியினர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள். “கொரோனா” காரணமாக ஒரு சிலர் மாத்திரம் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“கட்சியிலிருந்து யார் பிரிந்து சென்றாலும், சந்திரசேகரன் பெயரை நிச்சயம் நிலைக்கச் செய்வோம். கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தான் சம்பள உயர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையே உள்ளது. கூட்டு ஒப்பந்தம் இல்லாமல் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், இன்றுள்ள விலைவாசி அதிகரிப்புக்கு ஏற்ப தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாகப் பெற்றுக் கொடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களின் பொறுப்பாகும்.
சம்பள உயர்வு தொடர்பாக இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இணக்கம் எட்டப்படவில்லை. இந்த நிலையில் “கொவிட் – 19” காரணமாக சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த முடியாமல் ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டு காலம் இழுத்தடிக்கப்படும் போது தொழிலாளர்களுக்குத் தான் இழப்பு ஏற்படும் என்பதை மறந்து விடக் கூடாது.
மேலும், எமது நாட்டில் யுத்தம் நிலவிய காலத்தில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் மாகாண சபை நிர்வாக முறை ஏற்படுத்தப்பட்டது. அதன் ஊடாக அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இருந்தும் இப்போது மாகாண சபை முறை தேவையில்லை என்று கூறி வருகின்றார்கள். சில அமைச்சர்களும், மத குருமார்களும், தீவிரவாதப் போக்கு உடையவர்களும் தேவையில்லை என்று குரல் எழுப்பி வருகின்றார்கள். இவர்களின் கூற்றுகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக ஆட்சேபித்துள்ளார்.
மாகாண சபை நிர்வாக முறை சிறுபான்மை மக்களுக்கு கட்டாயம் தேவையான ஒன்றாகும். மாகாண சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது. ஒரு வகையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அஞ்சி இவ்வாறு மாகாண சபைத் தேவையில்லை என்ற கோசத்தை முன்வைக்க தூண்டி விடுகின்றார்களோ என்றும் சந்தேகம் கொள்ளத் தோன்றுகிறது. எம்மைப் பொறுத்த வரையில் மாகாண சபைத் கட்டாயம் நடைமுறையில் இருக்க வேண்டும். ஒருபோதும் இல்லாமற் செய்யக் கூடாது என்பதே எமது நிலைப்படாகும்” என்றார்.