உள்நாட்டு செய்தி
மேபீல்ட் சந்தியில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் ஒருவர் கைது
அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் ஒருவர் திம்புள்ள பத்தனை பொலிஸாரால் இன்று (13.09.2022) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று (12) மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் வாகன விபத்தினால் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் (சீ.சீ.டீ.வீ) அந்த நபர் விபத்தில் சிக்குவது பதிவாகியிருந்தது.
பின்னர் விபத்தை ஏற்படுத்திய நபர்கள் தொடர்பில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்தனர்.
அதனையடுத்து, கொட்டகலை ரொசிட்டா பகுதியில் வைத்து இந்த சம்பவத்தின் தொடர்புடைய வேன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சாரதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, மேற்படி இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததை அறிந்த சாரதி வேனுக்கு அடியில் இருந்து அவரை இழுத்து, வீதி ஓரத்தில் போட்டு விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸாருக்கு குறித்த சாரதி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மொரஹல, பலாங்கொடை, மெதகமமெத்த பகுதியைச் சேர்ந்த நதீர சம்பத் (வயது 27) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் தலவாக்கலை பிரதேசத்தில் உள்ள மீன் கடையொன்றில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞன், கல்லீரல் பாதிக்கப்பட்டு வயிற்றில் அதிக இரத்த ஓட்டம் ஏற்பட்டமை காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையை மேற்கொண்ட டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய நிபுணர் இனோகா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயிரிழந்த இளைஞன் அதிகளவான மதுபோதையில் இருந்துள்ளமை பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட வேன் சாரதியை நாளை (14) அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.