உள்நாட்டு செய்தி
பொருளாதார மேம்பாட்டு மையங்களை வலுவூட்டும் பல்துறைசார் கூட்டுப் பொறிமுறை

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்ய, கிராமிய பொருளாதார மேம்பாட்டு மையங்களை வலுவூட்டும் பல்துறைசார் கூட்டுப் பொறிமுறையொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) ஆரம்பித்து வைத்தார்.
எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் மக்கள் ஆரோக்கியமான உணவைப் பெறுவதற்காக சமூக – பொருளாதார சூழலை உருவாக்குவதே இதன் எதிர்பார்ப்பாகும்.
“உணவு இன்மையால் எந்தவொரு குடிமகனும் பட்டினியால் வாடக்கூடாது” மற்றும் “எந்தவொரு குழந்தையும் போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கக்கூடாது” என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.
இந்தப் பொறிமுறை ஏழு குழுக்களின் ஊடாக முன்னெடுக்கப்படும்.
ஜனாதிபதியின் தலைமையில் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குச் சபை இயங்குகிறது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கிற்கான தேசிய கூட்டுப் பொறிமுறை, ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையில் இயங்கும்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பிரதமரின் செயலாளரின் தலைமையில் இயங்கும்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கிற்கான ஒருங்கிணைந்த மாகாண பொறிமுறை, மாகாண ஆளுநர்கள் தலைமையில் இயங்கும். உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைந்த பொறிமுறை, மாவட்டச் செயலாளர்களின் தலைமையில் செயற்படும். உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கிற்கான பிரதேச கூட்டுப் பொறிமுறை பிரதேச செயலாளர்களின் தலைமையில் செயற்படுத்தப்படும்.
14,022 கிராம அலுவலர் பிரிவுகளிலும் தலா, கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல சேவை உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், குடும்ப நல செவிலியர், அருகில் உள்ள பாடசாலை அதிபர் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் இருவர் அடங்களாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்படும்.
அதன் மூலம் கிராம அலுவலர்கள் பிரிவுகளில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, வறுமையை ஒழித்து, போஷாக்குக் குறைப்பாட்டை நிவர்த்தி செய்து, பிரதேசத்தின் உணவு பாதுகாப்பை உறுதி செய்து, அப்பகுதியில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், தேசிய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொடவின் வழிகாட்டலின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பிரதமர், ஜனாதிபதியின் செயலாளர் முதல் கிராம உத்தியோகத்தர் வரை உள்ளடங்கியுள்ள முழுமையான அரச துறையுடன், தனியார் துறையினர், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழில் வல்லுனர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டின் மொத்த அரிசித் தேவையில் 3.6 மில்லியன் மெட்ரிக் டொன்கள், வருடாந்த வெங்காயத் தேவையில் 50% மற்றும் உருளைக்கிழங்குத் தேவையில் 35% என்பவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் வருடாந்தம் தேவைப்படும் 250,000 மெட்ரிக் டொன் சோயாவில் 20% வீத்தை, 2025 ஆம் ஆண்டளவில் உள்நாட்டில் உற்பத்தி செய்யவும், காய்ந்த மிளகாய்த் தேவையில் 20% வீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்யவும் திட்டமிடக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்குள் குரக்கன், பயறு, கௌபி, எள்ளு மற்றும் நிலக்கடலை ஆகியவற்றின் முழுத் தேவையை உற்பத்தி செய்யவும் இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கான கால்நடைகளின் மேம்பாட்டுக்காக வருடாந்தம் தேவைப்படும் 650,000 மெட்ரிக் தொன் சோளத்தில், 80% வீதத்தை இந்த ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டளவில், இலங்கைக்கு அவசியமான மொத்த சோளத் தேவையை உள்நாட்டில் பயிரிடவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்போகத்தில் நெல் மற்றும் சோளம் ஆகியவற்றை உற்பத்தி செய்யத் தேவையான 230,000 மெட்ரிக் டொன் இரசாயன உரத்தையும், 100,000 மெட்ரிக் டொன் TSP மற்றும் 182,000 மெட்ரிக் டொன் MOP, ஆகியவற்றை உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய கடன் வசதிகளுடன் இறக்குமதி செய்வதற்கும், ஏனைய உணவு உற்பத்திக்குத் தேவையான உரத்தை தனியார் துறையினர் மூலம் இறக்குமதி செய்வதற்கும் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாய இரசாயன உரம் மற்றும் இயற்கை உரம் ஆகியவற்றை தட்டுப்பாடு இன்றி சந்தையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 50 கிலோகிராம் யுரியா உரத்தை தற்போது சந்தையில் உள்ள விலையைவிட குறைவாக பெற்றுக்கொடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு பெரும்போகத்தில் சிறந்த அறுவடையைப் பெறுவதற்குத் தேவையான இரசாயன மற்றும் இயற்கை உரங்கள், கிருமி நாசனிகள், விதைகள் ஆகியவற்றை உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்வதற்கும் தற்போது நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
விவசாயம் மற்றும் கால்நடைத் துறை உற்பத்தி அளவை, 2018 ஆம் ஆண்டில் பெறப்பட்ட உற்பத்தி அளவுக்குக் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அதற்கு தேவையான விதைகள், இரசாயனப் பொருட்கள், இரசாயன உரங்கள், கால்நடை தீவனம் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட விவசாயத்துக்கு அவசியமான அனைத்துப் பொருட்களும் போதுமான அளவில் வழங்கப்படும். இந்த உற்பத்தி இலக்குகளை அடைவதற்கு, நவீன நீர்ப்பாசன கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
உரப் பயன்பாடு குறித்த அரசாங்கத்தின் கொள்கையை பிரபலப்படுத்தி அதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.