Connect with us

உள்நாட்டு செய்தி

உயிரிழந்த சிறுத்தை: புதிய அறிவிப்பு

Published

on

கடந்த 07 ஆம் திகதி ஹட்டன் வனராஐா கமர்ஹில் பகுதியில் உயிரிழந்த சிறுத்தை தொடர்பான அறிக்கை ஒன்றை தனக்கு பெற்றுத் தருமாறு விவசாய வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக ஆராய்ந்து அமைச்சருக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக அமைச்சின் செயலாளர் குழு ஒன்றை நியமித்துள்ளதுடன் அந்த குழுவினர் நேற்று (10) ஹட்டன் பகுதிக்கு வருகை தந்து இது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் தேவையான தகவல்களையும் திரட்டி வருகின்றனர்.

இதன்போது வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடமும் இந்த சம்பவத்தை நேரில் பார்வையிட்ட மக்களிடமும் தகவல்களை சேகரிக்கவுள்ளதுடன் சிறுத்தையின் மரணத்திற்கான காரணத்தை குறிப்பிடும் மருத்துவ அறிக்கையையும் பெற்றுக் கொண்டதன் பின்பு அமைச்சருக்கு குறித்த குழுவினர் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளனர்.

இதன்போது சிறுத்தையின் உயிரிழப்பு இயற்கையானதா?அல்லது அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக சிறுத்தை இறந்துள்ளதா? என்பது தொடர்பாக ஆராய்ந்ததன் பின்னர் குழுவினர் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக பரிந்துரைகளை மேற்கொள்வார்கள்.

அறிக்கை தனக்கு கிடைத்தவுடன் அதிகாரிகள் தவறிழைத்திருந்தால் அவர்கள் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தான் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 07 ஆம் திகதியன்று ஹட்டன் வனராஜா சமர்ஹில் பகுதியில் பன்றிக்கு குறி வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கிய நிலையில் சிறுத்தை ஒன்று மரத்தின் உச்சியில் ஏறிய போது அதில் சிக்குண்டு கீழே இறங்க முடியாமல் தவித்த நிலையில் சம்பவம் தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டது.

அங்கு வருகை தந்த வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மரத்தை தறித்து சிறுத்தையை மீட்பெதென தீர்மானித்து செயற்பட்டதன் அடிப்படையில் சிறுத்தையின் மீது குறித்த மரம் விழுந்து சிறுத்தை உயிரிழந்துள்ளது.

இதனை வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பாக செயற்பட்டு வருகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களும் அப்பகுதி பொது மக்களும் கடுமையாக விமர்சித்ததுடன் அதன் பயனாகவே அமைச்சர் மகிந்த அமரவீர அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வது தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.