உள்நாட்டு செய்தி
சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்
2021ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான 29.12.2020 அன்று ஆரம்பமாகியது.
சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும்.
இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது.
மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது.
இந்து சமயங்களின் நம்பிக்கைகளின் படி சிவனின் காலடி சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை (பாவா ஆதம் மலை) ஆதாமின் காலடி சுவடாக கருதுகின்றனர்.
இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள் நல்லதண்ணி பாதை வழியாக 28.12.2020 அன்று நள்ளிரவு மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டதாக சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார்.
இந்த முறை 4 வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணித்தது.
அந்தவகையில் பலாங்கொடை – பொகவந்தலாவ வீதியில் ஊர்வலம் பயணித்து, அவிசாவளை, அட்டன் – நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலம் சென்றது. மற்றைய ஊர்வலம் குருவிட்ட – இரத்தினபுரி வீதி ஊடாக பயணித்தது. மற்றது, பெல்மதுளை இரத்தினபுரி – ரஜமாவத்தை வழியாக சென்றது.
மேலும், சிவனொளிபாதமலை பருவகால யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுள் ஒரே தடவையில் 200பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் யாத்திரையில் பங்கேற்கும் அடியார்கள் தத்தமது பிரதேச செயலகங்களில் பதிவு செய்வதுடன் தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதைனை பொதுசுகாதார பரிசோதகர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட அனுமதி பத்திரமொன்றை தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் சிவனொளிபாதமலை பருவகால யாத்திரையில் பங்கேற்பதை தவிர்த்து செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட செயலகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.