Sports
“ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவார்”
உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் தங்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
இதனால் அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவார்.
தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் ஜோகோவிச்சின் விசாவை மீண்டும் வெள்ளியன்று ரத்து செய்தார்.
அவர் நாட்டில் இருப்பது தடுப்பூசிக்கு எதிரான உணர்வைத் தூண்டும் விதமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதை எதிர்த்து ஜோகோவிச் அவுஸ்திரேலியாவின் உச்சபட்ச நீதிமன்றங்களின் ஒன்றான, மெல்பர்னில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தை நாடினார்.
டென்னிஸ் வீரர் தரப்பில் 268 பக்க பிரமாண பத்திரமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக, ஜோகோவிச் தடுப்பூசிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளதாக அவுஸ்திரேலிய அரசு தரப்பு வாதிட்டது.
ஆனால், இதற்கான ஆதாரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளதாக ஜோகோவிச் தரப்பு தனது வாதத்தை முன்வைத்தது.
அரசு மற்றும் ஜோகோவிச் தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதன்மூலம் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் நடப்பு சாம்பியனான அவர் நாளை திட்டமிட்டபடி விளையாட முடியாது.
இதனால் அவுஸ்திரேலிய ஓபனில் பங்கேற்று, சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் வாய்ப்பை ஜோகோவிச் இழந்துள்ளார்.