உள்நாட்டு செய்தி
உணவு பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாட்டிற்காக அவசரகால சட்டம் இராணுவமயமாக்கலை தீவிரப்படுத்தும்: மிச்செல் பெச்சலட்

சமூக, பொருளாதார ஆட்சியில் இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் இராணுவமயமாக்கலின் பாரிய தாக்கத்தை பிரதிபலிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் தெரிவித்தார்.
உணவு பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாட்டிற்காக அவசரகால சட்டம் விதிக்கப்பட்டமை இராணுவமயமாக்கலை தீவிரப்படுத்தும் என ஆணையாளர் விசனம் வௌியிட்டார்.
அடிப்படை உரிமைகள், சமூக கருத்தாடல், ஜனநாயக நிறுவனங்கள், சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றில் பொறுப்புக்கூறல் இன்மை தொடர்வதாகவும் மிச்செல் பெச்சலட் குறிப்பிட்டார்.
உணவு பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு ஆகியவற்றை நோக்காகக் கொண்டு, ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி இலங்கையில் அவசரகால சட்ட விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.
இந்த அவசரகால நிலையின் விதிகள் மிகவும் பரந்துபட்டவை என்பதுடன், சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தின் பங்களிப்பை மேலும் விரிவாக்கக்கூடியவை என அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இராணுவத்தின் நடவடிக்கைகளை ஐ.நா அலுவலகம் உன்னிப்பாகக் கண்காணிக்கும் எனவும் அவர் கூறினார்.
இலங்கையில் சிவில் சமூகக் கருத்தாடலுக்கான வழிகள், பரந்த கலந்துரையாடல்கள் மூலம் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய மிச்செல் பெச்சலட், துரதிர்ஷ்டவசமாக மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமற்போனவர்களின் குடும்பங்கள் மீதான கண்காணிப்பு, மிரட்டல், நீதித்துறை துன்புறுத்தல் ஆகியவை தொடர்வது மாத்திரமல்லாமல், மாணவர்கள், கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், மதத் தலைவர்கள் ஆகியோரின் அரசாங்கக் கொள்கைகள் மீதான விமர்சனங்களுக்கு பாரிய வரையறைகளும் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
பல சாத்வீக போராட்டங்கள், நினைவுகூரல்களில் கலந்துகொண்டவர்கள் பலவந்தமாகக் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டதை நினைவுகூர்ந்த ஆணையாளர், சிவில் சமூகக் குழுக்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கவலை வௌியிட்டார்.
அடிப்படை சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்ற அச்சம் பரவலாக நிலவுவதாகவும் அவர் கூறினார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை இலங்கை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் எனவும் மிச்செல் பெச்சலட் வலியுறுத்தினார்.