உள்நாட்டு செய்தி
பாங்கி-மூன், மகிந்தவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும்
இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த சில நாட்களில் இலங்கை வந்து, தமிழினம் எதிர்கொண்ட போரழிவுகளை பார்த்து விட்டு, ஊர் திரும்பும் போது அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுகள் நடத்தி, இருவரும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த கோருகிறேன்.
மே 24, 2009 அன்று வெளியிடப்பட்ட அந்த கூட்டறிக்கையில் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தான் தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்தி 13ஐ அமுல் செய்து, அதை மென்மேலும் மேம்படுத்த (13+) உடன்படுவதாகவும், அதேபோல் சர்வதேச மனித உரிமை நியமங்களை ஏற்று இலங்கையில் கடை பிடிப்பதாகவும் உலக மன்றமான ஐநாவுக்கு, அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஐநா செயலாளர் பாங்கி-மூன், என்ற தனக்கு உறுதி அளித்ததை, இன்றைய அரசின் பிரதான கட்சியான பொதுஜன முன்னணியின் அதிகாரபூர்வ தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், அவரது எம்பிகளுக்கும், இவர்களின் பின்னால் இன்னமும் நிற்கும் சில பெளத்த பிக்குகளுக்கும் ஞாபகப்படுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.