Connect with us

உள்நாட்டு செய்தி

சிறைச்சாலை கட்டிடத்தொகுதியை மில்லேவ பிரதேசத்திற்கு இடமாற்றும் போது குழந்தைகள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள் – பிரதமர்

Published

on

வெலிக்கடை சிறைச்சாலை கட்டிடத்தொகுதியை ஹொரண மில்லேவ பிரதேசத்திற்கு இடமாற்றும் போது பெண் கைதிகளுடன் உள்ள குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷசிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தினார்.

வெலிக்கடை சிறைச்சாலை கட்டிடத்தொகுதியை ஹொரண மில்லேவ பிரதேசத்திலுள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பிற்கு இடமாற்றம் செய்யும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக ஸும் தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

30 பில்லியன் ரூபாய் செலவிலான இத்திட்டத்தை 2024ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்வதற்கு எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் இதன்போது பிரதமருக்கு நம்பிக்கை தெரிவித்தனர்.

திட்டம் செயற்படுத்தப்படும் ஹொரண மில்லேவ பிரதேசத்திலுள்ள நிலப்பரப்பு பெருந்தோட்ட நிறுவனமொன்றிற்கு சொந்தமான இறப்பர் உற்பத்தி செய்யப்பட்ட நிலமாகும்.

அங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 123 ஊழியர்களுக்கு இழப்பீடு செலுத்தப்படும். அவர்கள் வசித்த 57 தோட்ட குடியிருப்புகளுக்கு பதிலாக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் 57 புதிய வீடுகள் அமைத்து கொடுக்கப்படும்.

முதலில் மெகசின் சிறைச்சாலையும் ஏனைய சிறைச்சாலைகள் அதனை தொடர்ந்தும் மில்லேவ பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதுடன், வெலிக்கடை தூக்குமேடையும் ஹொரண பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

சிறையிலுள்ள கைதிகள் குற்றவாளிகள் அல்லாதவர்கள் என்பதால் சிறைச்சாலையை ஹொரணவிற்கு இடமாற்றும் போது அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவது பொருத்தமான நடவடிக்கையாக அமையும் என கௌரவ பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

சில பெண் கைதிகளுடன் குழந்தைகளும் காணப்படுவதால் அப்பிள்ளைகளின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் பிரதமர் குறிப்பிட்டார்.

அதற்கமைய பெண்கள் சிறைச்சாலையை மில்லேவவில் நிறுவும் போது குழந்தைகள் உள்ள கைதிகளை வேறுபடுத்தி குழந்தைகளுக்காக பராமரிப்பு மையமொன்று அமைக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரதமருக்கு நம்பிக்கை வெளியிட்டார்.

மெகசின், வெலிக்கடை, ரிமாண்ட், பெண்கள் ஆகிய சிறைச்சாலைகள் அப்பெயரிலேயே ஹொரண மில்லேவ பிரதேசத்தில் நிறுவப்படும். சிறைச்சாலை வைத்தியசாலை, சிறைச்சாலை பயிற்சி பாடசாலை, புனர்வாழ்வு மையம், சிறைச்சாலை உளவுத்துறை பிரிவு ஆகியனவும் மில்லேவவில் நிறுவப்படுவதுடன், சிறைச்சாலை தலைமையகம் பத்தரமுல்லையிலும் நிறுவப்படும்.

பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அளித்து புதிய சிறைச்சாலை கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்படுவதுடன், சிறைச்சாலையிலிருந்தே காணொளி தொழில்நுட்பம் ஊடாக வழக்கு விசாரணைகளுக்காக கைதிகளை முன்னிலைப்படுத்தும் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

இந்நாட்டின் சிறைச்சாலைகள் கட்டமைப்பில் 11,000 கைதிகளை சிறைப்படுத்துவதற்கான போதுமான வசதிகளே காணப்படுகின்ற போதிலும், அதில் மூன்று மடங்கு அதிகமானோர் சிறைப்படுத்தப்பட்டுள்ளதால் சர்வதேசத்தின் மத்தியில் அது தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளதாக தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி பொரளையிலுள்ள வெலிக்கடை சிறைச்சாலையை மில்லேவவிற்கு இடமாற்றுவது கட்டாயமானதாகும் என சுட்டிக்காட்டினார்.

பிரதமர் ஊடக பிரிவு