உள்நாட்டு செய்தி
ஊரடங்கு உத்தரவின் போது 19 அத்தியாவசிய செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி
ஊரடங்கு உத்தரவின் போது 19 அத்தியாவசிய செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, சுகாதார சேவைகள், பொலிஸ் சேவை, கிராம அலுவலகர்கள் மற்றும் அனைத்து துறைகளைச் சேர்ந்த களவிஜய அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், உள்ளுராட்சி அமைப்புக்கள் தேவையான ஊழியர்களுடன் பணிகளை முன்னெடுத்துச்செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளாந்த பயன்பாட்டுக்கான தேவைகளான மின்சாரம், நீர், தொலைத்தொடர்பு விநியோகம், எரிவாயு விற்பனை நிலையம், பெற்றோல் நிரப்பு நிலையம், மோட்டார் சைக்கிள் திருத்துமிடம், வீதி மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடி தொழிலாளர்களுக்கும் மளிகைப்பொருள் விற்பனை கடைகள், பல்பொருள் அங்காடிகள் இணையமூடாக விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் விநியோகஸ்தர்கள், வெதுப்பகங்கள் வங்கிகள், அத்தியாவசிய போக்குவரத்து பயணங்களுக்கும் அனுமதி வழங்க பட்டுள்ளது.
மேலும், இறுதிச் சடங்குகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் 24 மணிநேரத்தில் மேற்கொள்ள வேண்டும். என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஓரே நேரத்தில் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
65 வயதிற்கு மேற்பட்டோர், நாற்பட்ட நோயாளிகள் மருத்துவ தேவைகளை தவிர்த்து வெளியில் செல்ல முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனிப்பட்ட கூட்டங்களை நடாத்த முடியாது எனவும் நாளாந்தம் ஊழியம் பெறும் தொழிலாளிகள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நிவாரண கொடுப்பனவ வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.