Uncategorized
இந்தியாவின் 100 ஆவது சுதந்திர தின விழாவின் போது இந்தியா முற்றிலும் தன்னிறைவு பெற்று சுயசார்புடைய நாடாக இருக்க வேண்டும் : செங்கோட்டையில் பிரதமர் மோடி
நாட்டின் 75-வது சுதந்திர தினம், கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில், கட்டுபாடுகளுடனும், அதே நேரத்தில் வழக்கமான உற்சாகத்தோடும் நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை மூவர்ணக்கொடியேற்றி வைத்து, வீர வணக்கம் செலுத்தினார்.
இந்த விழாவில் மூத்த மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பதக்கங்களைப் பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டனர்.
தேசியக்கொடியை ஏற்றிவைத்த பின்பு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு…
- நாட்டு மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
- மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட அனைவரின் தியாகத்தையும் நினைவுகூர்வோம்
- நமது விடுதலை போராட்ட வீரர்களை நினைவுகூர்வதற்கான தினம் இன்று
- ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் மோடி கைகளை தட்டி பாராட்டு தெரிவித்தார்.
- ஒலிம்பிக்கில் நம் நாட்டு வீரர்கள் திறமையுடன் விளையாடி பெருமை சேர்த்தனர்.
- வருங்கால தலைமுறைகளுக்கு உற்சாகம், விழிப்புணர்வை விளையாட்டு வீரர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
- ஒலிம்பிக் தடகளத்தில் புதிய வரலாற்றை படைத்தது பெரிய விஷயம்
- ஆகஸ்ட் 14-ல் நாடு பிரிவினை அடைந்த போது பொதுமக்கள் கடும் துயரை அனுபவித்தனர்.
- கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகத்திலேயே நம் நாடுதான் முதலிடத்தில் உள்ளது.
- இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம் என்பது பெருமைக்குரிய விஷயம்
- கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பூசி கண்டுபிடித்தவர்கள் என அனைவருக்கும் எனது வணக்கங்கள்
- உலகின் முன்னணி நாடுகளில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கத்தொடங்கியதோ அப்போது இந்தியாவிலும் கிடைக்கத்தொடங்கியது.
- கொரோனா பெருந்தொற்று காலத்தில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கினோம்.
- நகரம், கிராமம் என்று இல்லாமல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சியை அடைய உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.
- நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக நிறைய திட்டங்களை வகுத்திருக்கிறோம்.