உள்நாட்டு செய்தி
தொழிலாளர்களை மனதளவிலும், உடல் நீதியாகவும் பலவீனமடைய செய்ய தோட்ட நிர்வாகங்கள் முயற்சி
1000 ரூபா வழங்குகின்றோம் என்பதற்காக தொழிலாளர்களின் சலுகைகளை பறிப்பதற்கு இடமளிக்க முடியாது என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (08) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
வழமை போல் மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவு மற்றும் ஏனைய சலுகைகளை தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டியது கட்டாயம் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனவே கடந்த மாதத்தில் பறித்த மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவை விரைவில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டியது கட்டாயம் எனவும் அரவிந்த குமார் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆகவே, தோட்ட நிர்வாகங்கள் ஏதேச்சையாக செயற்பட்டு, அந்த கொடுப்பனவை வழங்க மறுத்தால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த விடயம் சம்மந்தமாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரணவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
அதற்கு அவர் தற்போது எழுந்துள்ள இந்த பிரச்சினை குறித்து கலந்து பேசி கூடிய விரைவில் தீர்வொன்றை வழங்குவதாக உறுதியளித்தாக அரவிந்த குமார் மேலும் தெரிவித்துள்ளார்.
காலையில் கைக்காசுக்கு கொழுந்து பறிக்க வேண்டும் எனவும், மாலையில் ஒருநாள் பேருக்காக கொழுந்து பறிக்க வேண்டும் என நிர்வாகங்கள் தொழிலாளர்களை நிர்பந்திப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரித்துள்ளார்.
அவ்வாறு செய்வதன் மூலம் தொழிலாளர்களை மனதளவிலும், உடல் நீதியாகவும் பலவீனமடைய செய்ய முடியும் என தோட்ட நிர்வாகங்கள் கபடத்தனமாக செயற்பட முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே வழமையான தோட்ட தொழில் துறையை புறக்கணித்து புதிய வேலைச் செய்யும் முறையை தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு திணிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆகவே நரித்தனமாக தோட்ட தொழிலாளர்களை தோட்ட நிர்வாகங்கள் வஞ்சிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.