Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை இறைமை கொண்ட நாடு, அந்த நிலையை தொடர்ச்சியாக பாதுகாப்பதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பு

Published

on

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும் ஜக்கிய நாடுகள் அமைப்பின் சகல நிறுவனங்களுடன் தொடர்ச்சியாக இணைந்து செயற்படுவதாக அரசாங்கம் இன்று (25) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது.

இலங்கை இறைமை கொண்ட நாடாகும். அந்த நிலையை தொடர்ச்சியாக பாதுகாப்பதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையும் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக இன்று (25) பாராளுமன்றத்தில் அமைச்சர் விசேட அறிக்கை ஒன்றை விடுத்து உரையாற்றினார்.

இந்த பிரேரணை தேவையற்ற ஒன்றாகும். இது இலங்கை சட்டத்திற்கு முரண்பட்டதாகும் என்று குறிப்பிட்ட அமைச்சர் இந்த பிரேரணைக்கு பேரவையில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

பிரேரணை தொடர்பான விபரங்கள் அடங்கிய ஆவணங்களை அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அரசாங்கம் பொறுப்பு கூறல் விடயத்தை இலங்கை ஊடாக உள்ளூர் பொறிமுறையின் ஊடாக முன்னெடுக்கும் என்றும் கூறிய அமைச்சர், தனி ஈழ நாட்டை இலங்கையில் கட்டியெழுப்பும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிலர் தற்பொழுது அதனை வேறு ஒரு விதத்தில் முயற்சிக்கின்றனர். எல்.ரி.ரி.ஈ இனர் அன்று மேற்கொண்ட மனித உரிமைகள் குறித்து அன்று எவரும் குறிப்பிடவில்லை.

இவர்கள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை கொலை செய்ய முயற்சித்தனர். எதிர் தரப்பில் பலரை கொன்றனர். உள்ளூரில் மாத்திரமன்றி இந்தியாவின் முன்னால் பிரதமர் ரஜீவ் காந்தியையும் கொலை செய்தனர். ஈ.பீ.ஆர்.எல்.எப் ஜ சேர்ந்த பலரை கொலை செய்தனர். ஆனால் அவர்கள் தற்பொழுது மௌனம் காக்கின்றனர் என்றும் கூறினார்.

30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாடு பிளவுப்படுவதை இராணுவத்தினர் தடுத்து மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் கூறினார்.

மனித உரிமைகள் பேரவை எந்தவித அடிப்படையும் இன்றி இலங்கையில் உள் விவகாரங்களில் தலையிடுவதற்காக மேற்கொள்ளும் முயற்சியை நிராகரிப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திர தன்மையை முன்னெடுத்து மக்களின் மனித உரிமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பாதுகாப்பதற்கு சமகால அரசாங்கம் செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் ஆணையாளரான மிச்சேல் பெச்சலட் இலங்கைக்கு எதிராக சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாக பிரித்து பார்க்க முடியும். எல்.ரி.ரி.ஈ அமைப்புடன் இடம்பெற்ற மோதலில் அந்த அமைப்பு தோல்வியடைந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் உயிரிழப்புக்கள் குறித்து விசாரணை செய்வதில் உள்ள முரண்பாடுகள் மற்றும் கடந்த அரசாங்கத்தை தோல்வியடைய செய்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில் ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷவின் நிர்வாகத்தினால் முடிந்துள்ளமை விசேட அம்சமாகும்.

நாடொன்றில் உலக விடயங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் கருத்து தெரிவிக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை சீர்குழைக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் முன்வைத்த விடயங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பின்புலமாக அமைந்ததாகவும், இவர்கள் ஒன்றிணைந்த வகையில் செயற்பட்டுள்ளமை தெளிவாகுகின்றது என்றும் குறிப்பிட்டார்.

நாட்டின் சுகாதார நிலைமையை பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அறியாமல் அதுதொடர்பாக மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கையிட்டுள்ளார்.

கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நாடுகள் மத்தியில் இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது. இருப்பினும் இதுதொடர்பாக அறியாமல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த அரசாங்க காலத்தில் மாகாண சபை முறையில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது திருத்தம் தொடர்பில் வாக்களிப்பை நடத்துவதற்கு முடியாத நிலை ஏற்பட்டது. முன்னால் ஜனாதிபதி பிரதமருக்கு இடையில் இருந்து வந்த கருத்து முரண்பாடுகள் காரணமாக நாடு மேலும் சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கு அமைவாக மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் உயர்நீதிமன்றம் வரையில் விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனை சரி செய்வதற்கு ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷவிற்கு தெளிவான மக்கள் ஆணை கிடைத்ததாக அமைச்சர் தினேஸ் குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.

சில நாடுகளுடன் கருத்து வேறுப்பாடுகள் இருந்த போதிலும் வெளிநாட்டு அமைச்சு மாத்திரம் இன்றி ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியில் இணைந்து செயற்பாடுகள் முன்னெடுப்பதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி பிரதான கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த சட்ட பிரச்சினைகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.

எதிர்க்கட்சி கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல: மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஆவணம் 17 1ஃ2 பக்கங்களை கொண்டுள்ளது. இதில் 2 பக்கங்களிலேயே வடக்கு கிழக்கு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனையவற்றில் நாட்டில் ஜனநாயக சீர்குழைவு குறித்த விடயங்கள் உள்ளடக்கியுள்ளது. இந்த மனித உரிமை பேரவையை எமக்கு அறிமுகம் செய்தவர்கள் 1989 ஆம் ஆண்டு செயல்பட்டவர்களே. காணாமல் போனவர்கள் விடயத்தை சர்வதேச மட்டத்தில் இவர்கள் முன்னெடுத்தனர்.