உள்நாட்டு செய்தி
காத்தான்குடி மத்ரசா மாணவனின் மரணம் கொலை பிரேத பரிசோதனையின் போது உறுதி…!
சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மார்க்கட் வீதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் நேற்று முன் தினம் (5) செவ்வாய்க்கிழமை இரவு காத்தான்குடியைச் சேர்ந்த,
13 வயதான எம்.எஸ். முஷாப்ப் எனும் மார்க்க கல்வி கற்று வந்த மாணவன் மலசலக்கூடத்தில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டது அறிந்ததே..
மத்ரஸாவில் மஹ்ரிப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் குறித்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் அந்த மாணவனைத் தேடிய நிலையில்,
மலசலக்கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மரணமடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எமது பிள்ளை தூக்கில் தொங்குவதற்கு கோழையல்ல எனவும் ஏதோ அசம்பாவிதம் ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் மகனின் மரணத்திற்கு முறையான விசாரணை அவசியம் எனவும் கேட்டுக்கொண்டனர்.
மேலும், குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய நிலையில் மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டு சாய்ந்தமருது பொலிஸாரால் மதரஸா நிர்வாகியாகி கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
இது தவிர குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல எனக்கூறி பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்
காத்தான்குடி மத்ரஸா மாணவனின் மரணம் “கொலை” என பிரேத பரிசோதனையின் போது சட்ட வைத்தியரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.