முக்கிய செய்தி
கொடுப்பனவுகளை வழங்க மக்கள் மீது பாரிய வரிச்சுமை: பந்துல குணவர்தன ஆதங்கம்
ஊழியர்கள் கோரும் கொடுப்பனவை வழங்க வேண்டுமாயின் பொதுமக்கள் மீது வரிச்சுமையை அதிகரிப்பதன் மூலம் மாத்திரமே அதனை செயற்படுத்த முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவை பெற்றுத்தருமாறு கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த உலகத்தில் உள்ள யதார்த்தத்தை இந்த நாட்டு மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதை ஒரு துரதிஸ்டவசமாகவே நான் கருதுகின்றேன். 2022ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு வரி வருமானம் 1751 பில்லியன் ரூபா.
அதில் 1265 பில்லியன் ரூபா அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம். வரி வருவானத்தில் சுமார் 72 வீதம் அரச ஊழியர்களுக்கான சம்பளத்திற்காகவே செலவிடப்பட்டுள்ளது. 1565 பில்லியன் ரூபா கடன் வட்டி கடன் வாங்கி செலுத்தப்பட்டுள்ளது. இவை நான் கூறும் கதை அல்ல.
நாட்டின் கணக்காய்வாளர் கணக்கிட்டு நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கை. ஆகவே இவர்கள் கோரும் கொடுப்பனவுகளை வழங்க வேண்டுமாயின் நாட்டு மக்கள் மீது பாரிய வரிச்சுமை ஒன்றை செலுத்த வேண்டும்.
தற்போது இருக்கும் நிலையை கருத்தில் கொண்டே கொடுப்பனவை அதிகரித்து ஜனவரி மாதம் முதல் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவற்றை ஜனாதிபதியின் நிதியிலோ அரசியல்வாதிகளின் நிதியிலோ வழங்கவில்லை இவற்றை பொதுமக்கள் செலுத்தும் வரியிலேயே வழங்குகின்றோம்.
நாங்கள் கொடுப்பனவுகளை வழங்க விரும்புகின்றோம். ஆனால் அவ்வாறு வழங்க வேண்டுமாயின் யாரிடமாவது எடுக்க வேண்டும். எனவே பொதுமக்களிடம் இருந்துதான் எடுக்க முடியும்.
ஏற்கனவே பொதுமக்கள் பரிய வரிச்சுமைக்கு மத்தியில் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றார்கள். இதற்கு மேலும் எவ்வாறு பொதுமக்கள் மீது வரிச்சுமையை செலுத்துவது என கேள்வியெழுப்பியுள்ளார்.