முக்கிய செய்தி
நீர் மின் உற்பத்தி அதிகரிப்பால் மின் கட்டணங்கள் திருத்தப்படும்: நோயல் பிரியந்த
அதிக மழைவீழ்ச்சி மற்றும் அதிகரித்த நீர்மின் உற்பத்தி காரணமாக மின் கட்டணத்தில் திருத்தங்கள் ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களின் பிரதேசங்களில் மிக அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, 96% நீர்த்தேக்கங்கள் கொள்ளளவிற்கு நிரம்பியுள்ளன என்றார்.
அதன்படி, சுமார் 1,200 ஜிகாவொட் மணித்தியாலம் நீர் மின்சாரம் மூலம் சேமிக்கப்பட்டுள்ளது.
தற்போது 65% நீர்மின்சாரம் மூலமும் 17% அனல் மின்சாரம் மூலமும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், புதுப்பிக்கத்தக்க சக்தி 75% ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் மின்சார விநியோகத்தில் 80% புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமாகவே நடைபெறுகிறது.
நீர்மின்சார அதிகரிப்புடன், மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என பிரியந்த தெரிவித்தார்.
எதிர்காலத்தில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம்
முன்னதாக, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை திருத்த அதிகாரிகள் அனுமதி அளித்து வந்தனர். பின்னர், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை திருத்த அமைச்சரவை அனுமதி அளித்தது.