முக்கிய செய்தி
முடங்கியது தபால் சேவை
நேற்று (07) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் 48 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது.நுவரெலியா மற்றும் கண்டி தபால் அலுவலகங்களை ஹோட்டல் திட்டமொன்றுக்காக வழங்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நுவரெலிய பிரதான தபால் நிலைய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், சேவையை பெற்றுக்கொள்ள வந்த மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.மட்டக்களப்பு தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக மட்டக்களப்பு பிரதான அஞ்சல் அலுவலகத்தின் செயற்பாடுகளும் முடங்கியிருந்தன.
இதனிடையே, திருகோணமலை தோப்பூர் அஞ்சல் அலுவலகத்தின் செயற்பாடுகள் முடங்கியிள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அம்பாறை – கல்முனையிலும் தபால் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை தபால் அலுவலகத்தின் செயற்பாடுகளும் முடங்கியிருந்ததுடன், குருநாகல் தபால் நிலையமும் இன்று மூடப்பட்டிருந்தது.
கண்டி தபால் நிலைய ஊழியர்கள் சேவைக்கு சமூகமளித்திருக்கவில்லை.ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், காலி பிரதான தபால் நிலையங்களிலும் சேவைகள் ஸ்தம்பிதமடைந்தன.இதேவேளை, தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.கடன்களை பெற்றுக்கொண்டு, அதனை செலுத்த முடியாத பட்சத்தில், நாட்டின் வளங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அதற்கு தாங்கள் முழுமையாக எதிர்ப்பை வௌியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இன்று முதல் மூன்று நாட்களுக்கு தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்படுவதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருடன் கலந்துரையாடியதாக தபால்மா அதிபர் சத்குமார தெரிவித்துள்ளார்.பயனுள்ள முதலீட்டு வாய்ப்பை வழங்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக, நுவரெலியா தபால் நிலைய கட்டடத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்க ஜனாதிபதியின் செயலாளர் இணங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.