முக்கிய செய்தி
இலங்கையில் தீவிரமடையும் பௌத்த மயமாக்கல்: ஐ.நாவில் வலியுறுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இலங்கையில் ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்டு பதினான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த மயமாக்கல் நடவடிக்கைள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் புதன்கிழமை (27.09.2023) இடம்பெற்ற விடயம் 4 ன் கீழான பொது விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பௌத்த விகாரை அமைக்கும் முயற்சிகள் குருந்தூர் மலையிலுள்ள தமிழர்களின் பழமையான வழிபாட்டிடம் அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சிங்கள மக்கள் வசிக்காத தமிழர் தாயகப் பகுதிகளான நாயாறு, தையிட்டி, நாவற்குழி, மாங்குளம் சந்தி, கச்சல் சமனலங்குளம், கன்னியா வெந்நீரூற்று ஆகிய இடங்களிலும் பௌத்த ஆலயங்கள் அமைக்கப்பட்டு வருவதாக கஜேந்திகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இவ்வாறு சட்டவிரோதமாக ஆலயங்கள் கட்டப்படும் சில இடங்களில் அரச அனுசரணையுடனான சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில், மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் மூன்று லட்சம் கால்நடைகள் பயன்பெறக்கூடிய மேச்சல் நிலங்களில் வசித்து வந்த தமிழர்கள் துரத்தியடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பகுதிகளில் தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களால் சட்டவிரோதமான முறையில் சோளப் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அரசின் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதாகவும் கஜேந்திகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சட்டத்தினை நீக்குவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபைக்கு இலங்கை உறுதியளித்திருந்தாலும் அது இதுவரை நடைபெறவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்ற போதிலும், இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எந்த வித மாற்றமுமின்றித் தொடர்ந்த வண்ணம் இருப்பதாக கஜேந்திகுமார் பொன்னம்பலம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.