அரசியல்
சமஷ்டியே இறுதி தீர்வு: அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவுள்ள தமிழ் தரப்பு

அரசியல் அமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அதேவேளை, தமிழ் மக்களின் அபிலாசைகளைக்கொண்ட இறுதித் தீர்வாக சமஷ்டி இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தமிழ் கட்சிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளன.
13ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான பரிந்துரைகளையும், முன்மொழிவுகளையும் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்பாக அனுப்புமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே தமிழ் கட்சிகள் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பிற்குமான தர்மலிங்கம் சித்தாத்தன் தெரிவிக்கையில்,
13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதே நேரம், இறுதித் தீர்வாக சமஷ்டி இருக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் கட்சிகள் கடிதம் எழுந்தியிருந்தனர்.
இதே விடயத்தை அழுத்தம் திருத்தமாக அரசாங்கத்திற்குச் சொல்லவுள்ளோம். இதேவேளை இன்று (06.08.2023) நடைபெறும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கூட்டத்தின் பின்னர் இது தொடர்பில் ஆராய்ந்து ஜனாதிபதிக்கு எமது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளோம்.
அவர்கள் கோரியுள்ள முன்மொழிவுகள் அல்லது பரிந்துரைகள் என்ற விடயம் தொடர்பில் எமது முன்மொழிவாக 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்க்கக்கூடிய இறுதித் தீர்வாக சமஷ்டி அமைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்பதைத் தெரிவிப்போம் என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அதன் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடி எமது நிலைப்பாட்டை ஜனாதிபதியின் செயலாளருக்கு விரைவில் அனுப்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு முன்னாள் முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி க.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, ஏற்கனவே அரசாங்கத்திற்குக் கொடுத்த கடிதத்தில் உள்ள விடயங்களை, அதாவது மாகாணத்தில் இருந்து மத்திய அரசாங்கம் பறித்த அதிகாரங்களை மீண்டும் மாகாண சபைகளுக்கு வழங்கி, மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலை கூட்டணி, சமூக ஜனநாயக கட்சி, சமத்துவக்சட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈ.பி.டி.பி. அகில இலங்கைத் தமிழர் மகாசபை,ஈழவர் ஜனநாயக கட்சி என்பன வலியுறுத்தும்.
அத்துடன், 13ஆவது திருத்தச் சட்டததிற்கு அமைவாக மாகாண சபைகளிடம் இருந்து எடுத்துக் கொண்ட அதிகாரங்களை, மத்திய அரசாங்கம் மீண்டும் மாகாணத்திற்கு நிர்வாக கட்டளைச் சட்டம் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்தி மீண்டும் வழங்க முடியும், இதனை முதலில் செய்ய வேண்டும். இதன் பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரவுள்ளதாகவும் கலாநிதி க.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.