உள்நாட்டு செய்தி
நாட்டில் உணவு நெருக்கடி ஏற்பட்டால் எதிர்கொள்ள அரசாங்கம் தயார்
எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ளும் வகையில் கைவிடப்பட்டுள்ள 11,000 ஏக்கர் நெல் வயல்களில் மீண்டும் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்துள்ளார்.
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக கைவிடப்பட்டுள்ள நெல் வயல்களில் மீண்டும் பயிரிடும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும், இதற்காக அரசாங்கம் 420 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.“இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போது அரிசி ஏற்றுமதியை தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளன.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள உலக உணவு நெருக்கடியை எதிர்கொள்ள அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.எனவே, ஒரு நாடு என்ற வகையில், இந்த நெருக்கடியை எதிர்கொள்ள நாமும் தயாராக வேண்டும். நாட்டின் விவசாயத் துறையை மேம்படுத்துவதை அரசாங்கத்தால் மாத்திரம் செய்ய முடியாது. அதற்கு அனைவரின் ஆதரவும் அவசியம். அதன்படி, நாட்டில் கைவிடப்பட்டுள்ள வயல் நிலங்களில் மீண்டும் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் சுமார் 11,000 ஏக்கர் வயல் நிலங்களில் பயிரிட எதிர்பார்த்துள்ளதாகவும், கமநல அபிவிருத்தித் திணைக்களம் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதோடு, இதற்காக அரசாங்கம் 420 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக நெல் கொள்வனவை இடைநிறுத்தியிருந்த நெல் சந்தைப்படுத்தல் சபை, ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் மீண்டும் முறையான வழிமுறைகள் ஊடாக நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கொள்வனவு செய்யப்படும் நெல் கையிருப்பை களஞ்சியப்படுத்த நாடு பூராகவும் களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் எமது நாட்டில் அரிசி மேலதிக கையிருப்பு இருந்ததாகவும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அந்நிலை வீழ்ச்சி அடைந்ததால் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், இந்த வருடம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் மீண்டும் பழைய நிலைக்கு மீளலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.
எமது நாட்டின் பயன்பாட்டுக்கு சுமார் 24 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி தேவைப்படுவதாகவும், அந்த வகையில் தற்போது முன்னெடுக்கப்படும் முறையான பொறிமுறைகளின் மூலம் எதிர்காலத்தில் எமது நாடு அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடையும்.மேலும், சோளம், உழுந்து, பயறு உள்ளிட்ட மேலதிக பயிர்களின் விளைச்சளை அதிகரிக்க விவசாய அமைச்சரின் ஆலோசனையின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உழுந்து, பயறு ஆகியவற்றைப் பயிரிடும் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் எதிர்காலத்தில் உழுந்து பயறு ஆகிய பயிர்களில் பற்றாக்குறை ஏற்படாது என்றும் தெரிவித்தார்.நாட்டில் தற்போது இளைஞர்கள் படிப்படியாக விவசாயத்திலிருந்து விலகிவருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட அறிக்கை உரையில் குறிப்பிட்டபடி, விவசாயத் துறைக்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயத் துறையில் இளைஞர் சமுதாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இளைஞர் தொழில்முனைவோர் விவசாய கிராமங்களை நிறுவும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்காக பயன்படுத்தப்படாத அரச காணிகளை இளைஞர்களுக்கு விவசாயத்திற்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.தேசிய விவசாயக் கொள்கையை திருத்தங்களுடன் தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது என்றும், இது எதிர்காலத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தேசிய விவசாயக் கொள்கையின் ஊடாக இந்நாட்டின் விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்கு பாரியளவு பங்களிப்புச் செய்ய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.