உள்நாட்டு செய்தி
தம்புத்தேகம கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 05 ஆக அதிகரிப்பு..!
தம்புத்தேகம எரியாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.இன்று (04) காலை லொறியுடன் வேன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த நால்வர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மற்றுமொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குருநாகலிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று கடையொன்றிற்கு அருகில் நிறுத்தச் சென்ற போது, அதே திசையில் பயணித்த வேன் அதன் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த வேனில் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08 பேர் பயணித்துள்ளதாகவும்,அவர்களில் 36, 46 மற்றும் 55 வயதுடைய மூன்று ஆண்களும், 36 மற்றும் 43 வயதுடைய இரண்டு பெண்களும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்தில் படுகாயமடைந்த 11 வயது மற்றும் 06 வயதுடைய இரு சிறுவர்கள் மற்றும் 8 வயது சிறுமி ஒருவரும் தம்புத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேன் சாரதியின் கவனக்குறைவு மற்றும் அதீத வேகம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.