உள்நாட்டு செய்தி
அத்தியாவசிய மருந்து வகைகளின் பட்டியல் புதுப்பிப்பு – 266 மருந்துகளுக்கு தட்டுப்பாடு
அத்தியாவசிய மருந்து வகைகளின் பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய மருந்துகளின் எண்ணிக்கை 383 ஆக குறைக்கப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் மருத்துவர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அந்நியச்செலாவணி மற்றும் நிதிப்பற்றாக்குறை காரணமாக திறைசேரியின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும், தற்போது அத்தியாவசிய மருந்துகளின் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விசேட வைத்திய நிபுணர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.நாட்டில் தற்போது 266 மருந்துகளுக்கு பற்றாக்குறை காணப்படுவதாகவும் தேவையான மருந்துகளைக் கொள்வனவு செய்து கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அந்த மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டதன் பின்னர் நாட்டிற்கு கிடைப்பதற்கு 04 மாதங்கள் தேவைப்படும். இதேவேளை, சிசேரியன் உள்ளிட்ட சத்திரசிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் 30,000 அரை மயக்க ஊசிகளை இறக்குமதி செய்துள்ளதாகவும் அண்மையில் பாவனையில் இருந்து நீக்கப்பட்ட மயக்க மருந்துக்கு பதிலாக அவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.சத்திரசிகிச்சை பிரிவுகளைக் கொண்ட அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.