முக்கிய செய்தி
தெஹிவளையில் இயங்கிய சட்டவிரோத மறுவாழ்வு மையம்!
தெஹிவளை – மல்வத்தை வீதி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த புனர்வாழ்வு மையமொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நிலையமே இவ்வாறு பொலிஸாரால் சோதனையிடப்பட்டுள்ளது.
தெஹிவளை – மல்வத்தை வீதி பகுதியில் இயங்கி வந்த குறித்த நிலையம் தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையில் பதிவு செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, சட்டவிரோதமாக மையத்தை நடத்தி வந்த ஒருவரும், அவருக்கு உதவியதாகக் கூறப்படும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மையத்தில் 34 பேர் புனர்வாழ்வு பெற்று வந்த நிலையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.
மேலும், தற்போது புனர்வாழ்வு பெற்று வரும் நபர்கள் பாதுகாப்பு கருதி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 50 மற்றும் 51 வயதுடைய தெஹிவளை மற்றும் பொரளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.