உள்நாட்டு செய்தி
“அரசாங்கம் தனக்கு தானே குழி வெட்டியுள்ளது” – மனோ
1000 ரூபாவை பெற்று கொடுக்க முடியாவிடின் இ.தொ.கா அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மனோ கணேசன்…
“1000 ரூபா சம்பள அதிகரிப்பு விடயத்தில் எமது ஆட்சியில் தீர்வை வழங்க எதிர்ப்பார்த்து திறைசேரியினால் பணமும் ஒதுக்கப்பட்டது. ஆனால் அன்றைய பெருந்தோட்ட அமைசராக இருந்த நவீன் திசாநாயக்கவின் ஏதேச்சையதிகார செயற்பாட்டினால் அது தடைப்பட்டது.
இப்போது 1000 சம்பள உயர்வு கனவாகியுள்ளது. அதனை வழங்கினால் மாத்திரமே ஆறுமுகன் தொண்டமானின் ஆன்மா சாந்தியடையும். 1000 அடிப்படை சம்பளமாக வழங்கப்பட வேண்டும். தற்போதைய நிலையில் இ.தொ.காவின் வாய்பேச்சு மாத்திரமே எஞ்சியுள்ளது. ஆகவே 1000 ரூபாவை வழங்க வேண்டும். முடியாவிடின் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள்.
கொவிட் தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு இலவசமாகவே வழங்க வேண்டும். தற்போதைய சூழலில் ஐ.நாவை எதிர்கொள்ள முடியாமல் அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய குழுவொன்றை அமைத்தள்ளது. இந்த செயற்பாடு வெறும் கண் துடைப்பாகும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியிருக்க வேண்டும். இன்றைய சுழலில் ஜனாசா விடயத்தில் முஸ்லிம் மக்களையும் பகைத்துகொண்டுள்ளது. மொத்தத்தில் தற்போதைய அரசாங்கம் தனக்கு தானே குழி வெட்டியுள்ளது” என்றார்.