Connect with us

உள்நாட்டு செய்தி

தொழிலாளர்களின் நலனுக்கு எவராவது பொறுப்பேற்றால் நாங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலக தயார் – CWC

Published

on

கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் கிழக்கு முனையை இந்தியாவிற்கு பதிலாக வேறு நாடுகளுக்கு கொடுத்திருப்பார்கள். கடந்த காலங்களில் அந்த அரசாங்கம் அதனைதான் செய்ததென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் முன்னெடுக்கப்படுகின்ற 16 கற்கை நெறிகள் இன்று (28) இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“அரசாங்கம் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது. எனினும் கம்பனிகள் கொடுக்க முடியாது என்ற விடாப்பிடியிலேயே இருக்கின்றனர்.

இந்நிலையில் சம்பளநிர்ணயசபை ஊடாக சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது ஒரு நல்ல விடயமாகும் இந்த விடயத்தினை அரசாங்கம் முன்னெடுத்தால் கூட்டு ஒப்பந்தத்தில் சம்பளப்பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதற்கு தயாராக இருக்கின்றோம்.

எனினும் கூட்டு ஒப்பந்தம் என்பது வெறுமனே சம்பளப்பேச்சுவார்த்தை மட்டுமல்ல அதில் தொழிலாளர்களின் நலன்புரி விடயங்கள் உரிமைகள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தெரியாதவர்கள் கூட்டு ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கின்றனர். தொழிலாளர்களின் நலனுக்கு எவராவது பொறுப்பேற்றால் நாங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலக தயார்.

அதே நேரம் இன்று கொட்டகலையில் அமையவுள்ள நகரப் பல்கலைக்கழகத்திற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதனை நிர்மாணிப்பதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்போது இங்குள்ள மாணவர்களின் தேவைக்கேற்ப அதில் பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான கல்விக்குழாமும் தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே மிகவிரைவில் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படுமென தெரிவித்த அவர் கடந்த காலங்களில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நூறு நூற்றைம்பது மாணவர்களே கல்விகற்று வந்தனர் ஆனால் இன்று ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள் எனவே அவர்களின் நலன்கருதி கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தொண்டமான் தொழிற்பயிற்சி கிளைநிறுவனங்களை ஆரம்பிக்கவுள்ளோம்.

எமது ஒரே நோக்கம் மலையகத்தை சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு துறைகளில் வளர்ச்சிகாண வேண்டும் அவர்களுக்கு இந்த துறைகள் ஊடாக பொருளாதார நிலைமைகளை உயர்த்திக்கொள்ள வாய்ப்பு ஏற்பட வேண்டும் எனவே கடந்த காலங்களில் 12 ஆக இருந்த பாடநெறிகளை 14 ஆக அதிகரித்துள்ளோம். எனவே மாணவர்கள் இடைவிலகாது முழுமையான பயனை பெற்றுக்கொள்ளவேண்டுமென அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி, அட்டன் வலயக் கல்விப்ப ணிப்பாளர் பி.ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.