உள்நாட்டு செய்தி
வெள்ளிக்கிழமை முதல் Oxford AstraZeneca தடுப்பூசி
இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படும் கொவிட் தொற்றுக்கு எதிரான 5 இலட்சம் Oxford AstraZeneca தடுப்பூசி நாளை(28) இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
நாளை (28) காலை 11.00 மணிக்கு கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்திய விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் எடுத்து வரப்படும் இந்த தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் வைபவத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பங்கேற்று அவற்றை உத்தியோகபூர்மாக பொறுப்பேற்பார்.
இதனைத்தொடர்ந்து அந்த தடுப்பூசிகள் சுகாதார அமைச்சின்; குளிரூட்டப்பட்ட களஞ்சிய பகுதிக்கு எடுத்துச்செல்லப்படும்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) தொடக்கம் இந்த தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த தடுப்பூசி தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தலைமையில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று காலை இடம்பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அவர்…
“இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவும் நீண்ட கால நல்லுறவின் முக்கியத்துவம் தொடர்பை குறிக்கும் வகையில் இந்த தடுப்பூசியை ஜனாதிபதி பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கையில் உள்ள இந்திய தூதுவரினால் இந்த தடுப்பூசி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இதன் பின்னர் இந்த தடுப்பூசிகள் சுகாதார அமைச்சில் உள்ள குளிரூட்டல் களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்படும். இவற்றை இலகுவாக கையாளக்கூடியதாக இருக்கும்.
நாளை மறுதினம் முதல் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படும். முதல் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும், கொவிட்க்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கும் ஏற்றப்படவுள்ளது.
முதல் கட்ட நடவடிக்கையில் சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ஏற்றப்படவுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் தொற்றை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள இராணும், பொலிசாருக்கு வழங்கப்படவுள்ளது. இதில் சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வரை தடுப்பூசியை பெற்றுக்கொள்வார்கள்”என அவர் மேலும் தெரிவித்தார்