Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை கடற்படையை கண்டித்து இராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம், உயிரிழந்த தமிழக மீனவர்களுக்கு நட்டஈடு

Published

on

நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படை ரோந்து கப்பலுடன் மோதி கடலில் முழ்கி உயிரிழந்த தமிழக மீனவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி உயிரிழந்த நான்கு மீனவ குடும்பங்களுக்கும் தலா 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 30 வயதான மெசியா, உச்சிப்புளியைச் சேர்ந்த 52 வயதான நாகராஜ், 32 வயதான செந்தில்குமார் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த செம்சன் டார்வின் ஆகிய 4 பேர் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் இலங்கை கடற்பரப்பரப்பிற்குள் பிரவேசித்தாக கடற்படையினர் அவர்களை கைது செய்ய முற்பட்டபோது குறித்த தமிழக மீனவர்கள் வருகைத்தந்த விசைப்படகு இலங்கையின் ரோந்து கப்பல் மீது மோதியுள்ளது.

இதனால் 4 தமிழக மீனவர்களும் கடலில் முழ்கிய நிலையில் கடும் போராட்டத்தின் பின் 4 மீனவர்களும் நேற்றும், இன்றும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த நான்கு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு தொழில் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் இன்று (21) இராமேசுவரம் மதுரை நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இலங்கை கடற்படையை கண்டித்தும், மீனவர்களின் சாவுக்கு காரணமானவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.