உள்நாட்டு செய்தி
நிலக்கரி பற்றாக்குறை மின் உற்பத்தி நிலையத்தை மூடுமாறு பணிப்பு
திட்டமிட்டபடி நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாவிட்டால், அடுத்த ஆண்டு எட்டு முதல் பத்து மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை ஐந்து நிலக்கரி கப்பல்களே இலங்கைக்கு வந்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நுரைச்சோலை அனல்மின்நிலையத்தில் உள்ள மின்உற்பத்தி இயந்திரம் ஒன்றை அணைக்க பரிந்துரைக்கப்பட்டதாகவும் தலைவர் தெரிவித்தார். தற்போதுள்ள நிலைமையை சமாளிப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரை நாட்டிற்கு கொண்டு வரக்கூடிய கப்பல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளதாகவும், அது எதிர்வரும் வருடத்தில் மின்சார உற்பத்திக்கு போதுமானதாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.