Connect with us

முக்கிய செய்தி

இறைச்சி வகைகள் கொண்டு செல்ல தற்காலிக தடை

Published

on

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆடுகள் மற்றும் மாடுகள் திடீர் மரணமடைந்ததையடுத்து, மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி போக்குவரத்துகளை உடனடியாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக பதிவாகியுள்ள காலநிலை மாற்றங்களுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக விவசாய அமைச்சின் கால்நடைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மிருக மரணங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, இதுவரை பதிவாகியுள்ள விலங்குகள் இறப்புகள் பின்வருமாறு.

யாழ் மாவட்டத்தில் 49 மாடுகள், 17 ஆபத்தான நிலையில், 58 ஆடுகள் இறப்பு, 50 ஆபத்தான நிலையில்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 168 மாடுகள் மரணம், 159 ஆபத்தான நிலையில், 06 ஆடுகள் இறப்பு, 03 ஆடுகள் ஆபத்தான நிலையில்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 மாடுகள் இறப்பு, 159 நோய்வாய்ப்பட்ட மாடுகள், 42 ஆடுகள் இறப்பு.

வவுனியா மாவட்டத்தில் 21 மாடுகள்கள் இறப்பு, 17 ஆபத்தான நிலையில், 85 ஆடுகள் இறப்பு.

இதன்படி வடமாகாணத்தில் உயிரிழந்த மாடுகளின் மொத்த எண்ணிக்கை 358 ஆகவும், 352 மாடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன.

மேலும் அந்த மாகாணத்தில் 191 ஆடுகள் இறந்த நிலையில் 53 ஆடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன.

கிழக்கு மாகாணத்தில் உயிரிழந்த பசுக்கள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை 478 ஆகவும் ஆபத்தான நிலையில் உள்ள பசுக்களின் எண்ணிக்கை 352 ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும் 65 ஆடுகள் இறந்துள்ளன.

இந்தியாவை பாதித்த சூறாவளியுடன் கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரையோரங்களில் ஏற்பட்ட கடுமையான குளிர் காலநிலை காரணமாக இந்த விலங்குகள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது, ஆனால் இந்த விலங்குகள் மற்றொரு தொற்றுநோய் காரணமாக இறந்ததா? அதை உறுதி செய்யும் வகையில், இறந்த அனைத்து கால்நடைகளின் மாதிரிகளையும் கால்நடை துறையினர் எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.