Connect with us

உள்நாட்டு செய்தி

“தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்று விடுவிக்குமாறு பகிரங்கமாகக் கோருகிறோம்”

Published

on

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலான யுத்தம் மற்றும் வன்முறைகளுக்கு உள்ளான வடக்கு, கிழக்கு தமிழ் சமூகம் அரசாங்கத்திடம் நல்லிணக்கத்துக்கான சாதகமான சமிஞ்ஞைகளை எதிர்பார்க்கிறது.

அரசியல் கைதிகளின் பொது மன்னிப்பு என்பது நல்லிணக்கத்தின் நுழைவாயிலாகும் என  தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு- கிழக்கு வாழ் பொதுமக்கள் ஜனாதிபதிக்கு இன்று (5) அனுப்பி வைத்துள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி  சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழுமத் தலைவர் ஜே.ஜாட்சன் பிகிராடோ தலைமையில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர்,சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை முருங்கன் மற்றும் மன்னார் பகுதியில் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு அனுப்பி வைத்த மகஜரில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்

“பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட எமது குடும்ப உறுப்பினர்கள் இலங்கையின் பல்வேறு சிறைகளிலும் பல்லாண்டுகாலமாக சிறைவைக்கப் பட்டிருக்கிறார்கள். 

அவர்களில் சிலர்  தமது வாழ்வை இரும்புக் கம்பிகளின் பின்னாலேயே பல ஆண்டுகளாகக் கழித்து மூப்படைந்துள்ளதோடு உடல் இயலாமைக்கும் உள்ளாகியுள்ளனர்.

தற்போது 147 தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் உள்ளனர். இவர்களுள் 69 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 61 பேருக்கு வழக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இவர்களில் 7 பேர் பெண்களாவர். 

ஒரு பெண் ஒன்றரை வயது குழந்தையுடன் உள்ளார். சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் யாரும் இன்னும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்படவில்லை. இவர்களுள் பதின்ம வயதினரும் அடங்குவர்.   

சிறைச்சாலைகளில் தற்போது கோவிட் – 19 பெருந்தொற்று பரவுவதன் காரணமாக தமிழ் அரசியல் கைதிகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நாட்டின் வடக்கு கிழக்கு வாழ் சமூகத்தினரான நாம் பெரிதும் வருந்துகிறோம்.

ஜனாதிபதியான தாங்களும், இலங்கை அரசாங்கமும் தமிழ் அரசியல் கைதிகள் மீது கரிசணைகொண்டு அவர்களை விடுவிப்பதன் மூலம் சிறைகளில் பரவிவரும் பெருந்தொற்றிலிருந்து அவர்களின் உயிரைப் பாதுகாக்குமாறு கோருகிறோம். 

தண்டணைத் தீர்ப்பு விதிக்கப்பட்ட தழிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களை சிறையில் கழித்திருப்பதோடு பல்லாண்டுகளாக வெளியுலகைக் காணாது இருக்கிறார்கள். 

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்ப இலங்கை தன்னை அர்ப்பணித்திருக்கும் நிலையில், முப்பதாண்டுகளுக்கும் மேலான யுத்தம் மற்றும் வன்முறைகளுக்கு உள்ளான வடக்கு கிழக்கு தமிழ் சமூகம் அரசாங்கங்களிடம் நல்லிணக்கத்துக்கான சாதகமான சமிக்ஞைகளை எதிர்பார்க்கிறது. அரசியல் பொது மன்னிப்பு என்பது நல்லிணக்கத்தின் நுழைவாயிலாகும். 

அவ்வகையில், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்று விடுவிக்குமாறு தங்களிடம் பகிரங்கமாகக் கோருகிறோம்” என குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.