Connect with us

உள்நாட்டு செய்தி

“மனம் திறக்கிறார் விக்கி…”

Published

on

தனக்கும் சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு

“ஐ.நா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதி அளித்துள்ளதாக வவுனியாவில் செய்தியாளர்கள் மத்தியில் கூறி இருப்பதாக ஊடகங்களில் படித்தேன்.

சுமந்திரனின் இந்த கூற்றில் எந்த உண்மையும் இல்லை. இது அப்பட்டமான பொய். இந்த வரைபை தான் தயாரிக்கவில்லை என்றும் வேறு யாரோ தான் தயாரித்துள்ளார்கள் என்பதை அறிந்ததும் நான் இணக்கம் தெரிவித்துள்ளதாக வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல இந்த கடித விவகாரம் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்துவரும் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைகின்றன.
சுமந்திரன் பொய் கூறுவதை நிறுத்த வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். எனக்கும், அவருக்கும் இடையில் எந்தவித தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை என்றேன். அவருக்கு எனக்கெதிராக ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதைச் சொல்லட்டும். அதை விட்டு விட்டு பொய் கூற விழையக் கூடாது.

சுமந்திரன் தனது திறமைகளைத் தமிழ் மக்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தாமல், அரசாங்கங்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தி வருவதே எனக்கும் அவருக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு காரணமாகும். விரைவில் அவர் இந்த நிலைமையில் இருந்து விடுபட்டு, தனது சொந்த மக்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதை புரிந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதற்கு முன்வருவார் என்று நம்புகிறேன்.

அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வை புதிய அரசியல் யாப்பினுடாகத் தரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் செயற்படாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேரில் தன்னை ஆதரித்த மக்களுக்காகவும் தமிழ்த் தேசியத்துக்காகவும் உண்மையாக உழைக்க முன்வருமாறு அவரை அன்புடன் வேண்டுகின்றேன்” என தெரிவித்துள்ளார்.