Connect with us

உள்நாட்டு செய்தி

விபத்து – மதுபோதையில் இருந்த சாரதி கைது

Published

on

அட்டன் அளுத்கம பகுதியில் நேற்று (22.07.2022) மாலை பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று மூன்று முச்சக்கர வண்டிகளின் மீது மோதிவிட்டு, வீட்டின் நுழைவாயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூன்று பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அட்டன் பகுதியிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்ற பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான குறித்த ஆம்புலன்ஸ் வண்டி ஆரம்பத்தில் டிக்கோயா பகுதியில் இருந்து அட்டன் நகரை நோக்கிச் சென்ற இரண்டு முச்சக்கர வண்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகிவிட்டு, பின்னர் அதிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரம் வரை சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதி, வீதியின் அருகே இருந்த வீட்டின் நுழைவாயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தினால் குறித்த வீட்டுப் பகுதி சேதமடைந்துள்ளதுடன், குறித்த மூன்று முச்சக்கரவண்டிகளும் சேதமாகியுள்ளது.

ஆம்புலன்ஸ் வண்டியின் சாரதி மதுபோதையில் இருந்ததாகவும், அவரை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குநித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 60 வயதுடைய பெண் ஒருவரும், ஆண் ஒருவரும், 17 வயதுடைய இளைஞர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த பெண்ணின் வயிற்றிலும், தோள்பட்டையிலும், 17 வயது இளைஞனின் கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, விபத்தில் சிக்கியவர்களை இப்பிரதேச மக்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மதுபோதையில் இருந்த ஆம்புலன்ஸ் சாரதியை கைது செய்த அட்டன் பொலிஸார், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.