உள்நாட்டு செய்தி
அமைச்சர் ஜீ.எல் விஷேட உரை
ஜெனீவாவில் இன்று (13) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அவர் தனது உரையில், எமது முன்னேற்றம் மற்றும் சவால்களை திறந்த பரிமாற்றத்தில் இலங்கை தொடர்ந்தும் இந்த சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய உறுப்புக்களுடன பகிர்ந்துகொண்டுள்ளது. இந்த வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் திறந்த மனப்பான்மையிலேயே, தற்போதைய சபை அமர்வில் நான் இந்த உரையை ஆற்றுகிறேன்.
அண்மைய வாரங்களில் இலங்கை எதிர்கொள்ளும் பாரதூரமான சமூக மற்றும் பொருளாதார நிலைமையை சர்வதேச சமூகம் உணர்ந்துள்ளது. தொற்றுநோய் உள்ளிட்ட உலகளாவிய நெருக்கடிகளால் இந்த நிலைமை மோசமாகிவிட்டாலும், போராட்டங்களின் கவனம் பொருளாதார நிவாரணம் மற்றும் நிறுவன சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகளை உள்ளடக்கியது. இந்தச் சவால்களை அங்கீகரித்து, அனைவரையும் உள்ளடக்கிய முறையில் முன்னோக்கிச் செல்வதில், நமது மக்களின் அனைத்துப் பிரிவுகளின், குறிப்பாக, இளைஞர்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்ப்பது மிகவும் முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம்.
எதிர்காலத்திற்கான நிலையான அடித்தளமாக, பரந்த அடிப்படையிலான அரசாங்கத்தின் ஊடாக தேசிய பிரச்சினைகளுக்கு ஒருமித்த அணுகுமுறையை ஜனாதிபதியும் பிரதமரும் கோரியுள்ளனர். புதிய பிரதமரின் நியமனம் மற்றும் பல கட்சிகளை உள்ளடக்கிய புதிய அமைச்சரவையின் நியமனம் ஆகியவற்றுடன் அரசியல் மாற்றங்கள் ஏற்கனவே இடம்பெற்று வருகின்றன.
அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் தேவை, பாராளுமன்றம், சுயாதீன நிறுவனங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரங்களின் மீதான சரிபார்ப்பு மற்றும் சமநிலை ஆகியவற்றில் உள்ள அடிப்படை ஜனநாயக விழுமியங்களை ஒருங்கிணைப்பதற்காக, அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். இந்த சீர்திருத்தங்கள் ஜனநாயக அரசியலமைப்புக் கட்டமைப்பிற்குள் மற்றும் உரிய நடைமுறைக்கு ஏற்ப நடைபெறுவதை நாம் கூட்டாக உறுதி செய்ய வேண்டும். மாற்றத்தின் செயன்முறையானது, வலுப்படுத்த விரும்பப்படும் ஜனநாயக அமைப்புக்களை அழிக்கக்கூடாது.