Sports
டோனி மாற்றத்தை கொண்டு வருவாரா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) IPL தொடரின் 46 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை (SRH) இன்று சந்திக்கிறது.
புனேயில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது.
சென்னை அணியின் தலைவர் பதவியில் இருந்து ஜடேஜா விலகினார். அவர் தலைவர் பதவியை டோனியிடம் ஒப்படைத்துள்ளார். துடுப்பாட்த் திறன் பாதிக்கப்படுவதால் அதில் கவனம் செலுத்துவதற்காக ஜடேஜா இந்த முடிவை எடுத்துள்ளார். டோனி மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்த நிலையில் 2022 IPL போட்டித்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரையில் 8 போட்டிகளில் விளையாடி, இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த அணி 6 போட்டிகளில் தோல்வியும் கண்டு புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடரில் தற்போது எஞ்சிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியால் ‘பிளே-ஆப்’ சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்.
ஒன்றில் தோற்றாலும் வாய்ப்பு மங்கி விடும். அதனால் இனி ஒவ்வொரு போட்டியும் சென்னை அணிக்கு வாழ்வா-சாவா? மோதல் என்பதில் சந்தேகமில்லை.
மீண்டும் அணித்தலைவர் பதவியை ஏற்கும் டோனி மாற்றத்தை கொண்டு வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரின் துடுப்பாட்டம் சீராக இல்லாதது பலவீனமாக பார்க்கப்படுகிறது. இவர்கள் ஓரிரு போட்டிகளில் மட்டுமே ஜொலித்துள்ளனர். அம்பத்தி ராயுடு மட்டுமே பேட்டிங்கில் தொடர்ந்து நன்றாக ஆடுகிறார். பந்து வீச்சிலும் இதே போன்ற நிலைமை தான் காணப்படுகிறது. அது மட்டுமின்றி இந்த தொடரில் துடுப்பாட்டம் மிக மோசமாகவே உள்ளது.
இதுவரை 13 கேட்ச்களை நழுவ விட்டுள்ளனர். மொத்தத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றிப்பாதைக்கு திரும்பலாம். ஏற்கனவே தொடக்க லீக்கில் ஐதராபாத்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி அதற்கு பழிதீர்க்கும் வேட்கையுடன் வரிந்து கட்டும் என்று நம்பலாம்.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றிருக்கிறது. அந்த அணி துடுப்பாட்டத்தை விட பந்து வீச்சில் பலம் பொருந்திய அணியாக தென்படுகிறது. குஜராத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கடைசி பந்தில் ஐதராபாத் தோல்வியை தழுவியது.
இருப்பினும் அந்த ஆட்டத்தில் மணிக்கு அதிகபட்சமாக 153 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக் 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார்.
புவனேஷ்வர்குமார், டி.நடராஜன், மார்கோ ஜேன்சனும் பந்துவீச்சு கூட்டணியை வலுப்படுத்துகிறார்கள். துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் வில்லியம்சன், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ராம், நிகோலஸ் பூரன் உள்ளிட்டோர் கைகொடுக்கிறார்கள்.
இதனால் ஐதராபாத் அணி தங்களது வெற்றிப்பாதையில் நீட்டிப்பதில் தீவிரம் காட்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.