Connect with us

உள்நாட்டு செய்தி

மனைவியை கத்தியால் குத்தியவர் கைது

Published

on

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறைக்கு சென்று திரும்பிய கணவன், மனைவியின் வீட்டிற்குள் நுழைந்து மனைவி மீது கத்திக் குத்து தாக்குதல் நடாத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த பெண் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தலை மறைவாகியிருந்த கணவனை நேற்று (08) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு, புளியடிதீவு பிரதேசத்தைச் சேர்ந்த மேகலா என்ற பெண் திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதன்போது, கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதால் மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கும் கணவன் தாபரிப்பு பணம் செலுத்துமாறு நீதிமன்றம் கடட்ளையிட்டது.

இந்த நிலையில் இரு குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் மனைவிக்கு மாதாந்த தாபரிப்பு பணம் செலுத்தாமல் இருந்து வந்த கணவனான செந்தூரன் என்பவருக்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது, சிறையில் இருந்து வெளியே வந்த 40 வயதுடைய செந்தூரன். சம்பவ தினமான திங்கட்கிழமை (07) அதிகாலை மனைவியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை சமையல் அறைப்பகுதிக்கு இழுத்துச் சென்று அவரின் முதுகில் இரு கத்திகளால் 13 முறை தாக்குதல் நடாத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கே.சி.எம்..முஸ்தப்பா தலைமையிலான பொலிசார் தப்பிஒடி தலைமறைவாகிய செந்தூரனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் அவரை மட்டக்களப்பு நகரில் வைத்து நேற்று (08) மாலையில் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.