உள்நாட்டு செய்தி
2022: “நாவலர் ஆண்டு”
சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (17) அலரி மாளிகையில் நடைபெற்றது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரகடனத்திற்கான அங்கீகாரத்தையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும் வகையில் பிரதமரினால் அங்கீகாரக் கடிதம் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலகப்புகழ் பெற்ற ஓவியர் மு. பத்மவாசன் அவர்களினால் தத்ரூபமாக வரையப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இரு திருவுருவப் படைப்புகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.