உள்நாட்டு செய்தி
அம்பாறை மாவடிப்பள்ளிக்குள் யானை புகுந்து அட்டகாசம்
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, மாவடிப்பள்ளி வீட்டு குடியிருப்புகளை நோக்கி ஊடுருவிய காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் பிரதேசவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி மக்கள் குடியிருப்பு பிரதேசத்தினுள் இன்று (13) அதிகாலை புகுந்த யானைகளின் அட்டகாசத்தினால் வீட்டு மதில்கள் மற்றும் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இரவு நேரங்களில் அச்சம் நிலவிவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
யானைகள் வாழை,தென்னை முதலான மரங்களை அதிகமாக சேதமாக்கியுள்ளதுடன் அங்கு வீட்டில் தங்கியிருந்த மக்கள் தெய்வாதிகமாக உயிர் தப்பியுள்ளனர்.
மேலும் ஊடுருவும் காட்டு யானைகள் அயலிலுள்ள காடுகளுக்குள் இருந்து குறித்த பகுதி கிராமங்களுக்குள் வந்து சேதம் விளைவித்து வருவதாக மக்கள் தெரிவித்தனர்.
இக் காட்டு யானைகள் ஊருக்குள் ஊடுருவுவதைத் தடுப்பதற்காக ஊர்ப் பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சில யானை தடுப்பு மின்சார வேலிகள் செயலிழந்துள்ளதுடன் ஊடுருவியுள்ள காட்டு யானைகள் கூட்டம் வீட்டு மதிலினை உடைத்து சேதம் விளைவித்ததோடு பயன்தரும் பயிர்களையும் மரங்களையும் துவம்சம் செய்து சென்றுள்ளன.
காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதம் தொடர்பாக கிராம சேவையாளரிடமும் பொலிஸாரிடமும் கிராம மக்கள் அறிவித்துள்ளதாக தெரிவித்தனர்.