Connect with us

உலகம்

ஆப்கானிஸ்தானின் தற்காலிக அமைச்சரவை

Published

on

ஆப்கானிஸ்தானின் தற்காலிக அமைச்சரவையை, தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்தது.

முல்லா முகமது ஹசன் அகுந்த் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான், கடந்த மாதம் 15ம் தேதி தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

புதிய அமைச்சரவையை தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபீஹுல்லா முஜாஹித் அறிவித்தார்.

அதன்படி தலிபான் அமைப்பில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்நிலை குழுவின் தலைவரான முல்லா முகமது ஹசன் அகுந்த், பிரதமராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

“கத்தாரில் உள்ள தலிபான் அரசியல் அலுவலகத்தின் தலைவர் முல்லா அப்துல் கனி பராதர் மற்றும் மவுல்வி ஹவி ஹனாவி ஆகியோர் துணை பிரதமர்களாக இருப்பர். தலிபான் நிறுவனர் முல்லா முகமது ஒமரின் மகனான மவுல்வி முஹம்மது யூகூப் முஹாஜித் ராணுவ அமைச்சராகவும், ஹக்கானி அமைப்பின் தலைவர் சிராஜுதீன் ஹக்கானி உள்துறை அமைச்சராகவும், மவுல்வி அமீர் கான் மட்டாகி வெளியுறவுத் துறை அமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தவிர ராணுவத் தளபதி, உளவுப் பிரிவு தலைவர் உட்பட சில பதவிகளுக்கான நியமனங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ”இந்த அரசு தற்காலிக அரசுதான். மிக அவசியமாக தேவைப்படும் துறைகளுக்கான அமைச்சர்கள் மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்ற துறைகளுக்கான அமைச்சர்கள் பின் அறிவிக்கப்படுவர்,” என, முஜாஹித் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிராஜுதீன் ஹக்கானி, அமெரிக்க அரசால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.