உள்நாட்டு செய்தி
ஊரடங்கு காலப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களை இலக்கு வைத்து சட்டவிரோத மது உற்பத்தி
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் தோட்டத்தொழிலாளர்களை இலக்கு வைத்து மிகவும் சூட்சமமான முறையில் பாழடைந்த வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட வந்த நபர் ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சுற்றிவளைப்பு மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை கவரவில பாடசாலை சந்தியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதன் போது சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து கொண்டிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து கசிப்பு தயாரிப்பதற்காக தயார் நிலையில் இருந்து 60000 மில்லி லீற்றர் கோடாவும் மற்றும் 35 லீற்றர் கசிப்பு ஆகியன பொலிஸாரால் மீட்க்பட்டுள்ளன.
நீண்ட காலமாக மிகவும் இரகசியமான முறையில் மிகப்பெரிய அளவில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சுற்றி வளைப்பின் போது கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 08ம் திகதி அட்டன் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.