உள்நாட்டு செய்தி
ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பனி மூட்டம்

ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பனி மூட்டம் நிலவி வருகிறது.
வளைவுகள் நிறைந்த இந்த வீதிகள் மழையுடன் வழுக்கும் நிலை காணப்படுவதால் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தமது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாகவும் கடும் குளிரான காலநிலை நிலவி வருவதனால் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்களின் வருகை மிகவும் குறைவாக காணப்படுவதாகவும் இதனால் தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சி கண்டுள்ளதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நீர்போசன பிரதேசங்களுக்கு அதிக மழைவீழ்ச்சி கிடைப்பதனால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளன.
சில நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வான்வாயும் அளவினை எட்டியுள்ளதாகவும் மின்சாரதுறை அதிகாரிகள் தெரிவித்ததுடன் இதனால் உச்ச அளவில் மின் உற்பத்தி இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.