உள்நாட்டு செய்தி
யானைகளின் அட்டகாசம்: ஓட்டமாவடி மஜ்மா நகர மக்கள் அச்சத்தில்
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஜ்மா நகர் கிராமத்தில் இரவு வேளைகளில் யானைகளின் அட்டகாசத்தால் சொத்துக்கள் சேதமாக்கப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மஜ்மாநகர் கிராமத்தில் வாழும் மக்கள் தங்களது காணியில் பயன்தரும் மரங்கள் மற்றும் மரக்கறி தோட்டங்கள் அமைத்து பராமரித்து வரும் நிலையில் இரவு வேளைகளில் வரும் யானைகள் இவற்றை சேதப்படுத்தி செல்லும் நிலைமை காணப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நேற்று (22) இரவு மஜ்மாநகர் கிராமத்திற்கு வருகை தந்த யானை மூன்று நபர்களின் வீட்டுத் தோட்டத்தில் காணப்பட்ட தென்னை மரங்கள், மா மரங்கள், மரவள்ளி தோட்டம், தண்ணீர் குழாய் மற்றும் வேலிகளை துவசம்சம் செய்து சென்றுள்ளது.
இம்மாதம் மாத்திரம் மஜ்மாநகர் கிராமத்திற்கு இரவு வேளையில் யானைகள் இரண்டு தடவைகள் வருகை தந்து பயிர்களை துவம்சம் செய்து வீட்டு உபகரணங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மஜ்மாநகர் பகுதி மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கும், பயிர்களை யானைகள் துவம்சம் செய்யாது எமது பகுதியை சுற்றி யானை வேலி அமைத்து தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.