உள்நாட்டு செய்தி
மேல் மாகாணத்தில் வீடுகளில் வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களை கண்டறிவதற்கான விசேட வேலை திட்டம்
மேல் மாகாணத்தில் உள்ள வீடுகளில் வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களை கண்டறிவதற்கான விசேட வேலை திட்டம் ஒன்று இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வீடுகளில் வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளவர்களின் வயதெல்லையின் அடிப்படையில் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலை செய்த சந்தர்ப்பத்தில் தீக்காயங்களுடன் உயிரிழந்த 16 வயதுடைய ஜுட் குமார் ஹிஷாலினியின் வசிப்பிடமான டயகம பகுதிக்கு விஷேட பொலிஸ் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு வேலைக்கு அழைத்து வந்த ஏனைய சிறுமிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே இவ்வாறு விஷேட பொலிஸ் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரிஷாட் பதியுதீனின் குடும்பத்தினருக்கு வேலை செய்வதற்காக 11 சிறுமிகள் அழைத்து வரப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் கடமையாற்றி 22 வயதுடைய யுவதியிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உள்ளமை தெரியவந்துள்ளது.