Connect with us

உள்நாட்டு செய்தி

1,000 ரூபா சம்பளத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத அவல நிலை

Published

on

1,000 ரூபாய் சம்பளத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத அவல நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இருப்பதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (19) இடம்பெற்ற ஆளும் கட்சியின் குழு கூட்டத்தில் இந்த விடயத்தை எடுத்து கூறியதாக அவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

எனவே பெருந்தோட்ட கம்பனிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இதற்காக தொழில் அமைச்சும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும் தலையீடு செய்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் எடுத்து கூறியதாகவும் அவர் கூறினார்.

அதேபோல் விலைவாசிகளின் அதிகரிப்பால் பெருந்தோட்ட மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்வது தொடர்பிலும் ஜனாதிபதியிடம் எடுத்து கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சேதன பசளை பாவனை குறித்து மக்களுக்கு பூரண தெளிவூட்டல் இல்லை எனவும் எனவே அது குறித்து மக்களை மேலும் தெளிவூட்டுவது அவசியம் எனவும் ஜனாதிபதியிடம் எடுத்து கூறியுள்ளதாகவும் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் பட்டம் பெற்றும் அவை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்டும் வெளிவாரி பட்டதாரிகள் அரச தொழில் வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.