Connect with us

உள்நாட்டு செய்தி

மலையகப் பகுதிகளில் தொடரும் மழை: ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிப்பு

Published

on

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மலையகப் பகுதில் கனத்த மழை பெய்து வருகிறது.

இதனால் பல மாவட்டங்களில் வெள்ள நிலைமையும் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பெய்து கனத்த மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளன.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை முதல் கலுகல வரை உள்ள பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பொது போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன.

கினிகத்தேனை யட்டிபேரிய பகுதியில் பகுதியில் நேற்று (10) ம் திகதி காலை மண் சரிவு ஏற்பட்டதனால் பிரதான பாதையின் பொது போக்குவரத்து நேற்று முதல் துண்டிக்கப்பட்டுள்ளன.

வீதி அதிகார சபையினை வீதியில் சரிந்துள்ள மண் மற்றும் கற்பாறைகள் ஆகியனவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ள போதிலும் போக்குவரத்து இன்று (11) ம் திகதி வரை வழமை நிலைமைக்கு கொண்டுவர முடியவில்லை.

இதே நேரம் தியகல நோர்ட்டன் வீதியில் தியகலயில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலை வீதியில் மண்சரிவு ஏற்பட்டதனால் அவ்வீதி ஊடாக பொது போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளன.

இவ்வீதியினை பொது போக்குவரத்தினை வழமைக்கு கொண்டு வருதற்கான முயற்சிகளை வீதி அதிகார சபை எடுத்து வருகின்றன.

இதே வேளை கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெனில்வத்தை தொட்டத்தில் 04 ஆம் இலக்க தொடர் குடியிருப்பின் மீது மண்திட்டு ஒன்று சரிந்து வீழ்ந்ததனால் அந்த தொடர் குடியிருப்பில் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதில் வீட்டில் வசிப்பவர்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை.

என்ற போதிலும் உடைமைகள் சேதமடைந்துள்ளன. இவர்கள் அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு தேவையான நிவாரணங்களை அம்பகமுவ இடர் முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஹட்டன் பொலிஸ் பிரிவுகுட்பட்ட ஹட்டன் குடாகம பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பாரிய மண்திட்டு ஒன்று சரிந்து வீழ்ந்ததனால் அவ்வீடு முற்றாக சேதமடைந்துள்ளன.

குறித்த வீட்டில் இருந்தவர்கள் வேறு வீட்டில் இருந்ததன் காரணமாக அவர்கள் எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

இதே வேளை ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட வட்டவளை தமிழ் வித்தியாலயத்தில் மண்திட்டு ஒன்று சரிந்து வீழ்ந்து இரண்டு மாடி கட்டடத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாவாதன் காரணமாக மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் நேற்று (10) திகதி அதிகாலை முதல் திறக்கப்பட்டன.

இதனால் சென்கிளையார் நீர் வீழ்ச்சியின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளன. எனவே இந்த நீர் வீழ்ச்சியின் கீழ் தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என மின்சார சபை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே நேரம் மவுசாகலை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவு (11) திகதி அதிகாலை முதல் சுமார் ஆறு அங்குலம் வரை திறக்கப்பட்டுள்ளது. அத்தோடு விமல சுரேந்திர நீர்த்தேக்கதில் அதிக மழை காரணமாக நீர் வான்பாய்ந்து வருகின்றன.

அத்தோடு காசல்ரி, கெனியோன், லக்ஸபான , நவலக்ஸபான, பொல்பிட்டிய உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்து வான் பாயும் அளவினை எட்டியுள்ளன. இதனால் இந்த நீர்த்தேக்கங்களுக்கு கீழ் பகுதியில் வாழும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு மினசார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்துவரும் மழைகாரணமாக நீர் வீழ்ச்சிகள் ஆறுக்கள் மற்றும் ஓடைகள் ஆகியன பெருக்கெடுத்துள்ளன. இதன் காரணமாக அருகிலுள்ள விவசாய நிலங்கள், சுயதொழில் நிலையங்கள் காளான் உற்பத்தி இடங்கள் ஆகிய பாதிக்கப்பட்டுள்ளன.

விவசாய பயிர்களும் அழிந்து போயியுள்ளன. நேற்று (10) அதிகாலை முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடும் காற்று வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.

இதனால் ஒரு சில வீதிகளின் பொது போக்குவரத்து பல மணித்தியாலங்கள் துண்டிக்கப்பட்டன.

அத்தோடு சில பிரதேசங்களில் மின்சார இணைப்புக்கள் மீதும் மின் கம்பிகள் மீதும் மரங்கள் சரிந்து வீழ்ந்தமையினால் ஹட்டன் ,மஸ்கெலியா, காசல்ரி, வட்டவளை, உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மின்சாரம் பல மணித்தியாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் நகரங்களுக்கு மக்களின் வருகை குறைந்துள்ளன.

இதன் காரணமாக வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் குளிர் காரணமாகவும் கனத்த மழை காரணமாகவும் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்கள் வேலைக்கு வருவது குறைந்துள்ளன.

இதனால் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றனர்.