Connect with us

உள்நாட்டு செய்தி

அரசின் செயற்பாடுகள் கடும் ஏமாற்றமாக உள்ளன : கஜேந்திரகுமார்

Published

on

” மலையக மக்களையும் ஒடுக்கும் செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலைமையை உணர்ந்து, தங்களது அரசியல் நிலைப்பாட்டை மாற்றி பொதுவான தொரு நிலைப்பாட்டுக்கு மலையக தலைமைகள் வரும் பட்சத்தில் அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித தடையும் கிடையாது.” என் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பகுதிகளில் உள்ள சுமார் 600 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி (13) இன்று முன்னெடுத்திருந்தது.

இவ் நிவாரண பொருட்களை வழங்கி வைத்ததன் பின் சமகால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு…

” தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பதே எமது கருத்தாகும். மலையக மற்றும் முஸ்லிம் தலைமைகளுடன் இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் கடந்தகாலங்களிலும் முன்னெடுக்கப்பட்டன. எனினும், கொள்கை ரீதியிலான முரண்பாட்டால் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வரமுடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

வடக்கு, கிழக்கில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் கடந்த 73 ஆண்டுகளாக எவ்வாறெல்லாம் குறிவைக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டனவோ, மேற்படி அனைத்து நடவடிக்கைகளும் இன்று மலையக மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

எனவே, இந்நிலைமையை உணர்ந்து, மலையக மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள், வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களோடு ஒரு பொதுநிலைப்பாட்டை எடுத்து, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் விதத்தில் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால் இணைந்து செயற்படுவதில் எந்த பிரச்சினையும் இல்லை.

அதேவேளை, கடந்த அரசின் பொருளாதார மோசடி உள்ளிட்ட குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரம் மேம்படும் என்ற உறுதிமொழியை வழங்கியே தற்போதைய ஆட்சியாளர்கள் சிங்கள மக்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்றனர். ஆனால் அரசின் செயற்பாடுகள் கடும் ஏமாற்றமாக உள்ளன.” – என்றார்.