Connect with us

உள்நாட்டு செய்தி

மலை நாட்டில் கடும் மழை

Published

on

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் கடும் மழை பெய்து வருகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவி வருகிறது.

தலவாக்கலை பகுதியில் நேற்று மாலை முதல் பெய்துவரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்று இன்று காலை சில மணித்தியாலங்கள் திறக்கப்பட்டது.

நீர் போசன பிரதேசங்களுக்கு கனத்த மழை பெய்து வருவதனால் காசல்ரி, மவுசாகலை, லக்ஸபான, கெனியோன், நவலக்ஸபான, மேல்கொத்மலை, விமலசுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிக வெகுவாக உயர்ந்து வருகின்றன.

இதனால் எந்த வேளையிலும் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படலாம் என்பதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் பகுதியில் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மின்சார துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.

இதனால் இவ்வீதியினை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலைகள் மற்றும் மண்திட்டுக்களுக்கு சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளனர்.