உள்நாட்டு செய்தி
மத்திய மலை நாட்டில் பனிமூட்டம்:சாரதிகளுக்கு எச்சரிக்கை
மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மாலை வேளையில் பெய்யும் கடும் மழையுடன் ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – கண்டி பிரதான வீதிகளில் பல இடங்களில் என்றும் இல்லாதவாறு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
இதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் கவனமாக தங்களது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கலுகல, பிட்டவலை, கினிகத்தேனை, கடவளை, தீயகலை, வட்டவளை பகுதியிலும் ஹட்டன் – கண்டி வீதியில் கினிகத்தேனை, அம்பகமுவ உட்பட நாவலப்பிட்டி வரை உள்ள பல இடங்களிலும் கடும் பனி மூட்டம் காணப்படுகின்றன.
இதனால் வீதி ஓரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் வீதி சமிக்ஞைகள் எதுவும் கண்ணுக்கு தெரியாதவாறு பனியினால் மூடப்பட்டுள்ளன.
எனவே இந்த விதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் தங்களது வாகனத்தில் முகப்பு விளக்கை ஒளிர செய்தவாறு தங்களுக்கு உரிய பக்கத்தில் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிசார் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேநேரம், மாலை வேளையில் பல பகுதிகளுக்கு கடும் மழை பெய்து வருவதனால் ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றன.
எனவே குறித்த விதிகளை பயன்படுத்துவோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், பொகவந்தலாவை பகுதியில் மாலை வேளையில் பெய்து வரும் கடும் மழை காரணமாக லிங்ஸ்டன் மற்றும் லெச்சுமி தோட்டப் பகுதிகளில் கட்டிடம் மற்றும் மண் சரிந்து விழுந்து ஒரு வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் ஒரு தொடர் குடியிருப்பு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே மழை நேரங்களில் மண் மேடுகளுக்கும் மலைகளுக்கும் அருகாமையில் இருக்கும் நபர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.